சரவணன் சென்னையோட புது என்ட்ரி.சிட்டிக்குள்ள வந்து ரிஜிஸ்ட்ர் பண்ணி ரெண்டு நாள் தான் ஆகுது.சரவணனுக்கு சொந்த ஊரு மதுரை பக்கமுள்ள ஒரு குக்கிராமம், இங்கிருந்து சினிமாக்காரங்கள்லாம் அங்க போய் படமெடுக்க, அங்குள்ள இளைஞர்களோ வேலைக்காக இங்கே படையெடுக்கிறாங்க.
சரவணனோட ஊருக்குள்ள ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் பஸ்சே எட்டிப்பார்க்கும்.அப்படிப்பட்ட ஊர்ல இருபது வயசு வரைக்கும் அமைதியா இருந்தவன் இருபத்தியொரு வயசு பிறக்கவும் நா “கம்ப்ளிட் மேஜர்னு” இரண்டு செட் துணியோட சென்னைக்கு பஸ் ஏறி வந்துட்டான்.
கிராமத்தில இவன் கூட சுற்றிக்கிட்டிருந்த பயலுக நெறைய பேர் சென்னையோட பல ஹோட்டல்கள்ல,துணிக்கடைகள்ல வேலை பார்க்குறாங்க.அவங்க ரெக்கமன்டேஷன்ல சென்னை வி.ஐ.பிக்கள் அடிக்கடி வந்து போற ஒரு கிளப்ல சப்ளையர் வேலை!! பப், பார் எல்லாம் இருக்கு. அதுக்காக 30ஆம் தேதியே சென்னைக்கு கிளம்பி வந்தாச்சு.2ஆம் தேதி தான் வேலைல சேரனும்.இந்த ரெண்டு நாள் கிடைச்ச கேப்ல,சென்னைல எல்லா ஏரியாவையும் சுற்றி ரூட்ட கரைச்சு குடிச்சிரலாம்னு நெனைச்சிருந்தான் சரவணன்,ஆனால் அவன் தங்கியிருக்கிற தாம்பரத்த விட்டு வெளியே போகக்கூட தெரியல,ஏன்பக்கத்தில இருக்கிற குரோம்பேட்டைக்குக் கூட போகமுடியல.இவன் ரூம் மேட்ஸ் எல்லாம் அவங்கவங்க டேட்டிங்க்ஸ்ல பிஸி! சரவணனுக்கு இவ்ளோ பெரிய ஊர்ல வெளிய வர்றதுக்கே பயம் ஏதோ டி.டி.ஹெச் இணைப்பு புண்ணியத்துல பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கிட்டே ஒரு வழியா ரெண்டு நாள் பொழுதை ஓட்டிட்டான் சரவணன்.
இன்னைக்கு காலைல 7 மணிக்கெல்லாம் கிளப் வேலைக்கு போக தயாராயிட்டான்.10மணிக்கு தான் அங்க இருக்கணும்.இருந்தாலும் தெரியாத ஏரியாவுல அட்வான்சா போறது நல்லது தானேன்னு கிளம்பிட்டான்.
நடந்தே தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் வந்தான்.அப்ப 7.30மணி ஆயிடுச்சு!ஒருவழியா கூட்டத்தில தட்டுதடுமாறி பிளாட்பாரம் பெஞ்ச்ல ஓரமா ஓட்டிக்கிட்டான்.ஊருக்கு வந்தவுடனே பலமணிநேரம் காத்திருந்து சீசன் டிக்கெட் எடுத்தால இப்ப டிக்கெட் எடுக்கிற கவலை இல்லாம ‘ஹாயா’ உட்கார்ந்திருந்தான் சரவணன்.
காலையிலேயே இவ்வளவு கூட்டம்மானு பெருமூச்சு விட்டுகிட்டுருக்கும் போதே ரயில்வே ஸ்டேஷன் ஸ்பீக்கர் ரெண்டு மொழிகளில் மாறி மாறி அடுத்து வரும் ரயில் பற்றி கூவியது.சரவணனுக்கு ரெண்டாவது மொழிலேசாபுரிஞ்சுது,‘பயணிகள் கவனத்திருக்கு, சென்னை கடற்கரை வரை செல்லும் அடுத்த மின்தொடர் வண்டி இன்னும் சில நொடிகளில் ௧-வது நடைமேடையில் இருந்து புறப்படும்’னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள பின்னாடி நின்னுக்கிட்டிருந்த பாதி பேர் திமுதிமுனு ௧-வது பிளாட்பாரத்துக்கு படையெடுக்க ஆரம்பித்தார்கள்.
ரயில் அப்பத்தான் தூரத்துல தாம்பரம் ஸ்டேஷன்குள்ளேயே நுழையுது.சரவணனுக்குகையும் ஓடல காலும் ஓடல பதறி அடிச்சு டிராக்கில குதிச்சு ஓடி 1வதுபிளாட்பாரத்தை அடைந்தான்.
பத்து செகண்ட்லமின்சார ரயிலும் வந்தது.ஓடிபோய் ஒரு கம்பார்ட்மென்ட்ல ஏறி, ‘அப்பாடா “ங்கிறான். பின்னாடியிலிருந்து ஒரு அம்மா “தம்பி, இது லேடீஸ் பெட்டி ,இறங்குப்பா!” என்றார்.பதறி அடித்து இறங்கி பக்கத்து பெட்டிக்குள் போனால்,அங்கே நாலைந்து சரவணன்ன ஏற இறங்க பார்த்துட்டு கண்டிப்பா இவன் இந்த பெட்டி ஆள் இல்லேன்னு ஒரு கெஸ்பண்ணிட்டாங்க.ஹலோஇது பர்ஸ்ட் கிளாஸ்பா"ன்னு கோரஸ் பாடினார்கள்.மறுபடி இறங்கி அடுத்த பெட்டிக்கு ஏறுவதற்க்குள் ரயில் நகரஆரம்பிச்சிடுச்சு,அப்படி இப்படின்னு நெரிச்சுத்தள்ளி ஏறி கஷ்டப்பட்டு ஒரு கம்பிய பக்கத்து பயணியோட ஷேர் பண்ணிபிடிச்சு,ஒரு வழியா ரயிலுக்குள் செட்டில் ஆனான் சரவணன்.
வழக்கத்தைவிட அன்னைக்கு கூட்டம் கம்மிதான் அது தெரியாத சரவணனுக்கு இதுக்கே பெருமூச்சு வந்தது,ஒவ்வொருத்தரும் நவக்கிரகம் மாதிரி ஆளுக்கொரு திசை பார்த்து நிண்னுக்கிட்டிருக்காங்க,அதுல ரெண்டு, மூணு காதல்ஜோடிகள் வேற! சில பேர் பக்கத்துல இவ்ளோபேர் நிக்குறது கூட கவனிக்காம தனக்குதானே ஏதோ பேசிகிட்டிருந்தாங்க? “வேற என்னகாதுல ஹெட்போன். ‘ஹெட்போனை மாட்டிக்கிட்டு மளிகை சாமான் லிஸ்ட்லேருந்து பட்ஜெட் விவாதங்கள்,வியாபரங்கள்னு இந்த ரயில் பயணத்தில்தான் எல்லா “மேட்டருமே” டெவலப் ஆகுது’ ‘பாவம்’ இந்த பட்டனப்பொழப்புதான்எல்லாரையும் இப்படி பாடாப்படுத்துது’ அப்படின்னு மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டு ஒரு ஓரமா ஒதுங்குறான்.
அடுத்த சில நிமிடங்களில் ரயில் தாம்பரம் சானடோரியம் ஸ்டேஷன்க்கு வந்துடுச்சு, மீண்டும் திபுதிபுன்னு கூட்டம் ஏறுது.சரவணன் ஒவ்வொருத்தர் முகத்தையா அனலைஸ் பண்றான் “யார்கிட்ட கேட்கலாம்?” வேற ஒன்னுமில்ல சேத்துப்பட்டு ஸ்டேஷன் வந்தால் தகவல் சொலத்தான்.கடைசியில் தனக்கு எதிரில் ஆபிஸ் பைல் ஒரு கையிலயும் பை ஒரு கையிலயும் வைச்சிருந்த ஒரு நபரை செலெக்ட் பண்ணான்சரவணன்.
அவர்க்கிட்ட மெதுவா கேட்டான் “சார்! சேத்துப்பட்டு ஸ்டேஷன் வந்தததும் கொஞ்சம் சொல்றிங்களா?” தயக்கமே கேள்வியாக வந்தது.அந்த ஆளும்’சரி’ங்கற மாதிரி தலைய மட்டும் ஆட்டுனார்.மீனம்பாக்கம் தாண்டுறத்துக்குள்ளேயே இரண்டு தடவை “சேத்துப்பட்டு வந்துடுச்சான்னு’ கேட்டுட்டான் சரவணன்.அந்த ஆளு டென்ஷனாகி கண்ணவச்சு நல்லா பாருங்க சேத்துப்பட்டு வந்துரும்"னு சொல்லிட்டு வேற பக்கம் திரும்பிகிட்டார்.
அதேநேரம் ரயில் பழவந்தாங்கல் ஸ்டேஷனுக்குள்ள வந்து நின்றது.சரவணன் பக்கத்துல இப்ப புதுசா ஒருத்தர்! சரவணனை பார்த்த அவர் “தம்பி,சென்னைக்கு புதுசா வந்திருக்கியா? “அப்படினார்.“ஆமா சார்! இன்னிக்குதான் முதல்முறையா எலெக்ட்ரிக் டிரைனில் எறியிருக்கிறேன்னான்” சரவணன்.” அதான் தெரியுதே! சென்னை ஜாடையே தெரியலயேன்னு பார்த்தேன்னு சொல்லி தன் பெயர் மாதவன்னு அறிமுகப்படுத்திகொண்டார்.“அம்மா ஜாடை,அப்பா ஜாடை, ஏன் மாமா, அத்தை,பாட்டி, தாத்தா ஜாடை கூட கேள்விப்பட்டிருக்கேன். அது என்ன சென்னை ஜாடை?” என்ற சரவணனிடம், “அது ஒன்னுமில்லப்பா, எப்பவுமே பரபரப்பா இருக்கணும். ஏதாவது செஞ்சுக்கிட்டே இருக்கணும் முக்கியமா காதுல கண்டிப்பா ஹெட்போன் இருக்கணும், இதுல ஒன்னும் உன்கிட்ட இல்லையே!” மாதவனின் பேச்சைக்கேட்டு சிரிப்பு வந்துடுச்சு சரவணனுக்கு.
மாதவன் விடுறதா இல்ல திருப்பியும் ஆரம்பிக்கிறார்.சரவணன் குறுக்கே புகுந்து, “சார்! சேத்துப்பட்டு வந்தா கொஞ்சம் சொல்றிங்களா?” அப்படின்னான். உடனே மாதவன், “கவலைப்படாததம்பி! நான் நுங்கம்பாக்கத்தில இறங்குவேன்,அடுத்தஸ்டாப்தான் சேத்துப்பட்டு!ரயில்வேகார்டு நம்ம பிரெண்ட் தான். நான் இறங்கும்போது அவர்கிட்ட சொல்லி சேத்துப்பட்டுல கூட ஒரு விசில் அடிக்க சொல்றேன்.இறங்கிக்கோ இன்னும் 6,7 ஸ்டேஷன் இருக்குப்பா. டோன்ட் வொர்ரி!“என்றார் மாதவன்.
சரவணன் பதில எதிர்பார்க்காம அவரே பேச்சதொடருறார் “அதுக்கு முன்னால நீ சென்னையில கத்துக்க வேண்டிய பாடம் நெறைய இருக்கு. பர்சை காலியா வச்சுக்கோ, எ.டி.எம். கார்டை பர்ஸ்லையே வைக்காதே!ரோட்ல எப்பவுமே வேகமா தான் நடந்து போகணும், யார் மேலையாவது இடிச்சா பரவாயில்லை நின்னுடாத! முக்கியமா மூக்கபொத்த கர்ச்சிப் வச்சுக்கோ அதான் ரொம்ப முக்கியம்! ஆட்டோவில ஏறவே ஏறாத முடிஞ்ச அளவுக்கு ஷேர் ஆட்டோவ தேடி போய் ஏறு,போன் இருக்கோ இல்லையோ சும்மானாலும் காதுல ஹெட்போனை மாட்டிக்கோ” இப்படியே அடுக்கிட்டே போனார் மாதவன்.
இந்த கேப்ல அந்த கம்பார்ட்மென்ட்ல ஐம்பது நூறு பேராவது இறங்கிஏறியிருப்பாங்க. டிரெயின் கிண்டி தாண்டிடுச்சு. செமகூட்டம் ‘யாருமே பேசமாட்டிக்கிராங்களேனு நினைச்ச சரவணனுக்கு இப்ப இந்த மாதவன் ‘எப்ப பேச்ச நிறுத்துவார்’னு இருந்துச்சு. இந்த கூட்டத்திலேயும் ஒரு சம்சா விக்குற பையன்,பாட்டுப்பாடி தருமம் எடுக்கிற சாரி! சம்பாதிக்கிற கண்பார்வை இல்லாதவங்கனு பல பேரோடபிஸ்னெஸ்சூடுபிடிக்க தொடங்கிடுச்சு. கடமைக்குகம்பார்ட்மென்ட்லநாலு பேர்க்கிட்ட மட்டும் செக் பண்ற டிக்கெட் செக்கரும்வந்து தன்னோடகடமைய முடிச்சுட்டு போய்ட்டார்.
ஆனா மாதவன் விடுறதா இல்ல “சென்னையில பாரு, இங்க யாருக்கும் பொறுப்பில்ல.ஒரு விபத்துன்னாகூடபரிதாபபடக்கூட யாருக்கும் நேரமில்லாம ஓடுறாங்க, ஆனால் நான் அப்படி இல்ல, பெருசா எதுவும் பண்ணமுடியலைன்னாலும் ஓவ்வொரு முறைஆம்புலன்ஸ் என்ன கிராஸ் பண்ணும் போதெல்லாம் மனசுக்குள்ள இந்த வண்டியில போற மனுஷன் பொழைச்சுக்கின்னும்னு வேண்டிக்குவேன்” அப்புறம், இன்னொரு முக்கியமான விஷயம்! இந்த ரயில்வே ஸ்டேஷன்லியே நெறைய பிரச்சனைகள் இருக்கு, நாம இறங்க வேண்டிய ஸ்டாப் வர்றதுக்கு ரெண்டு ஸ்டேஷன் முன்னாடியே வாசல் ஒட்டி வந்து நின்னுரனும்.ஆனா வெளியில தொங்கக்கூடாது. ரயில் ஓடிகொண்டிருக்கும் போதுஏறவோ, இறங்கவோ கூடாது! எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆயிடுச்சு! அதனால நான் இறங்குவேன், அனுபவமில்லாதவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அப்புறம்…“அப்படின்னு யோசிச்சார் மாதவன்.
“அப்புறம் என்ன சார்?” கோபமா கேட்டான் சரவணன் “ஒன்னுமில்ல என் ஸ்டேஷன் வந்துடுச்சு! அதனால நா இறங்குறேன் நீ அடுத்த ஸ்டாப்ல தான் இறங்கனும் ரெடியா இருன்னு சொல்லிகிட்டிருக்கும் போதே மாதவனோட மொபைல் சிணுங்க பேசிக்கிட்டே சரவனன்கிட்ட கைகாட்டிகிட்டே இருக்கும்போதே அவர்இறங்குறதுக்குள்ள ரயில் கிளம்பியதால அவசரஅவசரமாய் இறங்குறார்.
“சரி! ஒ.கே.சார் பார்க்காலாம்"னு சரவணன் சொல்றதுக்குள்ள மாயமானார்மாதவன்.
அவர் கத்துன சத்தம் மட்டும்தான் கேட்டுச்சு பேசிகிட்டே இருந்தவரோட முதுகுப்பை டிரெயின் வாச கதவுல சிக்கி கால்தடுக்கி தடுமாறி ரயில் அடியில போய்டார். அதுவரைக்கும் யாரைப்பற்றியும் கவலை இல்லாம கம்பார்ட்மென்ட்ல இருந்த ஒட்டுமொத்த பேரும் சத்தம் போட வண்டிய நிறுத்தினார்டிரைவர்.
எல்லாரும் இறங்கி ஓடுறாங்க.சரவணனும் பார்க்க நினைத்தான் நெருங்கமுடியாத கூட்டம். “அடி பலம் தான், உடனேஆஸ்ப்பத்திரி கொண்டுட்டு போனா காப்பத்திடலாம்” கூட்டத்தில யாரோ சொன்னதுசரவணன் காதில விழுந்துச்சு.
அதுக்குள்ளரயில்வே பாதுகாப்புபடை வீரர்கள்வந்துட்டாங்க.அவர்களுடன் வந்த இருவரும்,சுற்றி வேடிக்கை பார்த்த சிலருமாக சேர்ந்து மாதவனை தூக்கி ஆம்புலன்சில் ஏற்றுவதற்கான வேலைகள் நடத்த ஆரம்பித்தார்கள்.’ மணி 9.30 ஆயிடுச்சு. பத்து மணிக்கு நான் ஆபிசில இருந்தாகணுமே என்று நினைத்த சரவணன் சிக்னல் பாஸாகி கிளம்ப தயாரான அதே ரயிலிலேயே ஏறிட்டான்.இரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையம் வந்து நிக்குது.பாலம் ஏறி வெளியில வர்ற சரவணன் சாலையில வேகமா நடக்க ஆரம்பிச்சான்.அப்ப அவனகடந்துபோகுது ஒரு ஆம்புலன்ஸ்…
இப்ப சரவணனும் மனசுல வேண்டிக்கிட்டான்.“அந்தஆம்புலன்சில போற உயிர் பிழைக்கனுமுனு "
“இவ்வளவு நேரம் பேசிட்டு வந்தவருடைய முகத்த கடைசியா ஒருதடவை பார்த்திருந்துக்கலாம் இறந்திருப்பாரோ?“ன்னு யோசிச்சுக்கிட்டே வந்தவனுக்கு பாதை முழுக்க மாதவன் முகம்தான் தெரிந்தது.வேலைக்குநேராமயிடுச்சேனு விறுவிறுவென நடந்தான்..
**** “இப்ப சரவணன் முகத்திலையும் சென்னை ஜாடை தெரிய ஆரம்பிச்சிடுச்சு”…..
**
**
இப்படிக்கு
திருநெல்வேலியிலிருந்து-மு.வெ.ரா
**“சென்னையில் ஒரு நாள்” **
**
**
**தினமணி பத்திரிக்கையில் ஞாயிறுக்கிழமை இலவச இணைப்பு கதிர் இதழலில் மார்ச் ஐந்தாம் தேதி 2011 ****அன்று ****வெளிவந்த சிறுகதை… **