April 19, 2011

"அப்பாச்சி"

கி.பி 21 ஆம் நூற்றாண்டில் ஒரு  ஏப்ரல் மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை “மின்சார ரயிலின் அலார சத்தத்தோடும், சூரியனுக்கு முன்னரே விழித்துக் கொண்ட தொழிற்சாலை இயந்திரங்கள் கக்கும் புகை மூட்டத்தோடும் தொடங்கியது.பாஸ்போர்ட் எடுப்பதில் தொடங்கி பிச்சை போடுவது வரை எல்லாவற்றிற்கும் கியூ,அதிகாலையிலேயே பாம்பு போல நெளிந்து பல கிலோமீட்டர் வளைந்து நெடு நீண்டு வளர்ந்திருந்தது”…

இப்படியாய் அன்றும் விடிந்தது ஒரு கார்ப்பரேட் காலைப்பொழுது. ஆம்! சுதந்திரத்திற்க்காக போராடி பின் உடைந்திருந்த சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த போராளிகள் மீட்டுக் கொடுத்த தமிழகத்தின் தலைநகரம்.இன்று செல்போன் நெட்வொர்காரர்களால் “தமிழ்நாடு வேறு சென்னை வேறாய்” பிரிந்து கிடக்கிற பழைய மதராசபட்டணம். நம் இன்றைய மெட்ரோபோலிட்டன் சிட்டிகளில் ஒன்றான சிங்காரசென்னையின் தின விடியலையே சுனாமி போல் ஆட்கொண்டுவிட்டிருந்தது ஒருபரபரப்பு…

     “சென்னை ஒரு தனி ஊர் இல்ல” இங்க ஏற்படுற ஓவ்வொரு அதிர்வும் ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுக்க பிரதிபலிக்கும்பார் ஒரு படத்தில் நம்ம கனவு தொழிற்சாலையின் ஹீரோ (வசனகர்த்தா எழுதி கொடுத்த டயலாக் தான் பேசினார் சந்தேகமே வேண்டாம்) அப்படி பொழப்புக்காக பிடிச்சதெல்லாம் விட்டுகிட்டு வந்து சென்னையில் செட்டிலானவன் தான் நம்ம செந்தில்.

 தன்னோட 13 வயசிலேயே அப்பாவ இழந்தவன் 18 வயசு வரைக்கும் காத்திருந்து பத்து பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி 300 ரூபாய் சம்பளத்துக்கு வீட்ல அம்மா, தங்கச்சி எல்லாம் தனியா தவிக்க விட்டுட்டு தலைநகர்ல வந்து தடம் பதிச்சுரலாம்ங்கற ஆசையோட சென்னையில வந்து அவன் கால் வச்சு பலவருஷங்கள் ஓடிபோச்சு.
ஊருக்கு வந்த முதல் 5 வருஷம் வரைக்கும் வயித்தக்கட்டி வாயக்கட்டி சேர்த்து வச்சு பணத்தில நாலு மாசத்துக்கு ஒரு தடவையாவது வீட்டுக்கு போய் வந்துக்கிட்டிருந்தவன். சென்னை தான் சொந்த ஊர்ன்னு முடிவானதற்கு பிறகு வருசத்துக்கு ஒரு தடவை வர்ற தீபாவளிக்கோ,பொங்கலுக்கோ தான் அம்மாவ பார்க்க அவன்வீட்டுக்குபோவான்.

இப்ப அவனுக்கு கல்யாணம் வேற ஆயிடுச்சி.இதுலஅறிவியல் கொடுத்த பரிசான (நம்ம உடலுறுப்புகள்ல ஒண்ணா மாறிப் போன) ‘செல்பேசி’ வந்ததால அம்மா-பையன் உறவை “ஆட் ஆண்” (ADD ON ) பண்ணிட்டான்" இருபது காசுதான, அத வச்சு சில பண்டிகை மாதிரி நல்ல நாட்கள்ல தொலைக்காட்சி விளம்பர இடைவெளிகள்ல குடும்பத்துக்கிட்ட குசலம் விசாரிக்கிறதோட சரி.’ அப்படி இப்படின்னு காலம் வேகமா ஓடுச்சு" விடுமுறைக்கு விடுதலை கொடுத்து விடியலை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்தில் இவனும் ஒருவன் ஆயிற்றே" " சனி ஞாயிறு மறந்தால் தானே சம்பளம் திருப்தியாய் பெறமுடியும்.“ஓடினான் ஓடினான் வேலை,வீடு என்று மாறி மாறி எல்லாம் மறந்து ஓடிக்கொண்டேயிருந்தான்.
  காலஓட்டத்தில மீட்டர்கேஜ்லேர்ந்து ப்ராட்கேஜ்லேர்ந்து மாறின ரயில்வேதண்டவாளங்கள் மாதிரி " நம்மசெந்தில்-பிரியா ஜோடியாகி 6 வயசில ஒரு பையன் பெயர் “விதர்ஷன்”(நியூமாரலஜி பார்த்து வச்ச பேரு) அடுத்து இரண்டு வயசில ஒரு பொண்ணு பேரு “விஷாலினி” (இதுவும் ஸ்பான்சர்ட் பை நியூமாரலஜி தான்)நாலுபேரோடஒரு புதிய குடும்ப அட்டை பதிவாகி சென்னை மக்கள் தொகை எண்ணிக்கைய கொஞ்சம் அதிகமாக்கிடுச்சு.

பள்ளி கோடைவிடுமுறை கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் அலுவலகத்தோட வருட கட்டாய விடுமுறை வேற கொடுத்துட்டாங்க.அதனால தன்னோட ஆறு வருஷம் பிளான் செயல்படுத்த போராடி ஒருவழியா அதுல வெற்றியும் அடைஞ்சுட்டான்.அதாங்க “செந்தில் குடும்பத்தோடு இன்னைக்கு ராத்திரி “9.00"மணிக்கு “நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்ல பல வருஷங்கள் கழிச்சு தாமிரபரணி தண்ணி குடிக்க போறான். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பக்கத்தில இருக்குற சின்ன கிராமம் ‘வெள்ளக்கோவில்’ தான் நம்ம செந்திலோட சொந்த ஊர். காலையிலேயே லக்கேஜ்பாக்கிங் ஆரம்பிச்சிட்டாங்க.

  நேரம் போச்சு… மத்தியானம் முணுமணி ஆயிடுச்சு. செந்தில் பையன் விதர்ஷன் பெட்ரூம்ல, ஒரு பக்கம் சுட்டி டி.வி ஓட மறுபக்கம் எப்.எம்ல விஜய்பாட்டு ஓட துப்பாக்கி, பீரங்கி, வாள் (பயந்துராதீங்க எல்லாம் இந்தக் காலத்து குழந்தைகள் விளையாடுற பொம்மைகள்தாங்க) இதெல்லாம் சூழ குப்புறப்படுத்து தூங்கிகிட்டிருந்தான்.அவன தட்டி எழுப்பினான் செந்தில்..

“விதர்ஷன் குட்டி எழுந்திரிம்மா” மணி ஆயிடுச்சு.சீக்கிரம் எழுந்திரிடானு கொஞ்சினான்

ரொம்ப நேரம் தொடர் முயற்சிக்கு அப்புறம் லேசா முனங்கிட்டே பேச ஆரம்பிக்கிறான்விதர்ஷன் “அப்பா இந்த சம்மர் லீவ்ல கூட முழுசா தூங்க விடமாட்டிக்கீரிங்களே? நா லேட்டா தான் தூங்கினேன். “இன்னும் கொஞ்சநேரம் தூங்குறேன் ப்ளீஸ்ப்பா” அப்படினான். (பின்ன வருஷம் முழுக்க அதிகாலை 4 மணிக்கெல்லாம் எந்திரிச்சு கிளம்பி அன்றாட நெருக்கடிகள்ல இரவு 11 மணி வரைக்கும் தூங்காம, ஓய்வில்லாம வளர்ந்த பொம்மை பிள்ளைகள்ல அவனும் ஒருத்தானச்சே “) சரி அப்பா கூப்பிட்டாரேனு அரைமனசோட எந்திரிச்சு பிரஷ் கூட பண்ணாம நேரா கிச்சனுக்கு போறான்.அங்க அவன் அம்மா பிரியா விதர்ஷன் தங்கச்சி “விஷாலினிக்கு” பிஸ்கட் ஊட்டி விட்டுக்கிட்டுருந்தா,விதர்ஷனுக்கு பார்சல் வாங்கி வச்ச (ப்ரீ ஹோம் டெலிவரி ) ‘சீஸ் பிஸ்ஸாவ’ எடுத்து கொடுக்கிறா, அத விறுவிறுன்னு முழுங்கினான். ‘சோட்டா பீம்”(கார்ட்டூன்நிகழ்ச்சி ) பார்க்க போகனுமாம் அதான் அவ்வளவு அவசரம்.

  அதுக்குள்ள சூரியன்மேற்க்கே கீழ் நோக்கி கொஞ்சம் ஷிப்ட் ஆயிடுச்சு. இப்ப மணி அஞ்சு ‘ஆட்டோ பிடிச்சிட்டு வந்தான் செந்தில்’ உடனே பிரியா,விதர்ஷன் விஷாலினி எல்லாரும் ரோல்லிங் டிராவல் பேக்கோட பயணத்த ஆரம்பிச்சாங்க. எக்மோர் ரயில்வே ஸ்டேஷனுக்கு, “பின்ன ஊர்ல டிராபிக் ஜாம் பார்த்துருப்போம் ஊரே ட்ராபிக் ஜாமா இருக்கிறத சென்னையில தான் பார்க்க முடியும்.” ஒரு இடத்துலேர்ந்து இன்னொரு இடத்துக்கு போக கிலோமீட்டர்க்கு பத்துநிமிஷம் கூட ஆகும்"அதான் நம்ம செந்தில் குடும்பமும் 9 மணி டிரைனுக்கு 5 மணிக்கெல்லாம் வீட்ல இருந்துகிளம்பிட்டாங்க…

   ஒரு வழியா சைக்கிளேர்ந்து-மிதவை பேருந்து வரைக்கும் எல்லா வண்டியையும் கடந்து, பண்ணின மேக்கப் எல்லாம் கலைஞ்சு பயனத்த ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அசதியா எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்ல வந்து இறங்கினாங்க…‘அரைமனசா ஆட்டோக்காரனுக்கு அள்ளிக் கொடுத்துட்டு பிளாட்பாரத்துக்குள்ள காலடி எடுத்து வைக்கிறாங்க ஓவ்வொரு பிளாட்பாரமா கடக்கும் போது தான் “மிஸ்செஸ்பிரியாசெந்திலுக்கு” வீட்டிலே மறந்து வச்சுட்டு வந்த விஷாலினியோட பால்பாட்டில், விதர்ஷனோட விளையாட்டு சாமான் இரண்டு பேரோட மருந்து சீட்டுனு மறந்துபோன பொருட்களோட பெரிய லிஸ்டே ஞாபகத்துக்கு வருது.

  செந்தில் எனக்கு கொஞ்சம் இதெல்லாம் ஞாபகப்படுத்தியிருக்க கூடாதாங்கறா பிரியா, அதுக்கு கூலா ஆரம்பிக்கிறான் செந்தில், “பரவாயில்ல பிரியா,யு டோன்ட் வொர்ரி, ரெண்டு மூணு நாள் தான அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு சொல்லி அந்த டாப்பிக்கு எண்டு கார்டு போடுறான். கொஞ்சம் நேரம் ரயில்வே பிளாட்பார்ம்ல புள்ளிவிவரம் சேகரிப்பு பணியில ஈடுபட்டு டைம்பாஸ் பண்றாங்க.ஆடி அசைஞ்சு டிரையின் வந்து நிக்குது. பேசென்ஜெர்ஸ் லிஸ்ட் செக் பண்ணிடிரையின்உள்ளஏறி உட்கார்ந்ததும் பல வருட களைப்ப ரயில்வே பெர்த்ல படுத்த உடனே உணர்ந்தான் செந்தில். சில நிமிடங்கள்ல ஒரு சிலுப்பு சிலுப்பி உற்சாகமான பெரிய விசில் சத்ததோட திருநெல்வேலி சந்திப்பு நோக்கி தன்னோட பயனத்த தொடங்குது நெல்லை எக்ஸ்பிரஸ்.

விதர்ஷன் மட்டும் உம்முன்னு இருந்தான்.இந்த லீவுல அவன் பார்க்கனும்னு நெனைச்சிருந்த தீம் பார்க்,ஷாப்பிங் மால்ஸ் பிளான்லம் போச்சேங்கற ஏக்கத்தோட, அவன் இதுவரைக்கும் பார்க்காத அவனுக்கு பிடிக்காத கிராமத்துக்கு போய்க்கிட்டுருக்கான்.ஒரு சின்ன அமைதி “கடிகார முட்கள் ஓட்டபந்தயம் ஆறேழு ரவுண்டு முடிஞ்சிடுச்சு “மறுநாள் காலை 6 மணி காவேரி, வைகை தென்றல்களை கடந்து பொதிகை தென்றல கிழிச்சுக்கிட்டு வேகமாபோய்க்கிட்டுருக்குநெல்லைஎக்ஸ்பிரஸ்.ஜன்னல் வழியா வெளிய வேடிக்கை பார்த்துட்டேவர்றான் விதர்ஷன். வழக்கமா அவன் ஊரில பெரிய பெரிய கட்டிடங்களுக்கு நடுவிலேயே சூரியன பார்த்து ரசிச்சவனுக்கு முழு சூரியன அதோட இளஞ்சிவப்புநிறத்துபரிமாணத்துல அதுவும் காலை நேரத்தில பார்த்ததும், வயல் வெளிகளுக்கு நடுவில போற இந்த ரயில் பயணம்னு எல்லாமே ஒரு புது அனுபவமாவே இருந்துச்சு.டிரையின் கோவில்பட்டி தாண்டவும்கஷ்டப்பட்டு ரயில் கழிப்பறையில் காலை கடன்கள்ல சிலத முடிச்சிட்டு வெளியில வந்தவனுக்கு கடம்பபூர்ல போளியும்,காப்பியும் ரெடியா இருந்துச்சு வாங்கி சாப்பிட்டான்.

ஒரு வழியா நெல்லை எக்ஸ்பிரஸ் சிமெண்ட் மண் சூழ்ந்த தாழையத்துகிட்ட நெருங்கும் போது விதர்ஷன் உற்சாகமா கத்துறான்.“அப்பா இங்கையும் பெரிய பெரிய பில்டிங்க்லாம் இருக்குப்பா” அப்படின்னு சந்தோஷப்பட்டான். செந்தில் சிரிச்சுக்கிட்டான். நீண்டநேர ஓட்டத்துக்கு பின்னாடி நெல்லை சந்திப்புல மூச்சு வாங்குச்சு…நெல்லை எக்ஸ்பிரஸ் செந்தில் குடும்பத்தோட எறங்கி ரயில்வே ஸ்டேஷன் வாசலுக்கு வர்றான். “ஏலே நானும் திருநெல்வேலிகாரந்தாம்லனு போராடி அடிச்சு பேசி 80 ரூபாய்க்கு வருவேன்னு சொன்னஆட்டோக்காரன் கிட்ட 50 ரூபாய்க்கு பேரம்பேசி கூட்டிட்டு போனான்.” ‘ஆட்டோ மெல்லகிளம்பவும் விதர்ஷன் வயித்திலையும் ஏதோ கிளம்புச்சு….

ஆட்டோ ஜங்ஷன் பேருந்துநிலையம் தாண்டி தேவர் சிலையை கடக்கவும் “சுலோச்சனா முதலியார்” பாலம் கல்வெட்டுல ‘தாமிரபரணி ஆறு’னு எழுதியிருந்தத கஷ்டப்பட்டு எழுத்து கூட்டி படிச்சான் விதர்ஷன் (இங்கிலீஷ் மீடியம் பையனாச்சே) ஆறப்பார்த்து வாய் பிளந்தான். கூவம் மாதிரி இதுவும் ஒரு ஆறுனு நெனைச்சவனுக்கு அதுல குளிக்கிறவங்கள பார்க்கும் போது ஆச்சிரியமா இருந்துச்சு. வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் தாண்டி திருவனந்தபுரம் ரோட்டில பயனமாகுற ஆட்டோமுருகன்குறிச்சி சிக்னல்ல இடது பக்கமாதிரும்பிதிருச்செந்தூர் ரோடுல கொஞ்ச தூரம் போகுது.அப்ப அங்க இடது பக்கம் வர்ற ரோடுல திரும்பி மரங்களுக்கும் வயலுக்கும் நடுவில வேகமா போகுது. அந்த ரோட்டோட கடைசிய அடையவும் ‘வெள்ளக்கோவில்’ கிராமம் வந்துடுச்சு. சுற்றி உள்ள ஊர்கள்ல காலகாலமா இந்துக்கள்ல இறந்து போனவங்கள எரிக்கவோ, புதைக்கவோ இந்த ஊருக்கு தான் இன்னைக்கும் கொண்டு வர்றாங்க.“திருநெல்வேலியில பாளையங்கோட்டைல பிறந்து வளர்ந்தபலபேர்.இப்பஎங்கயோ எந்த ஊர்லயோ வாழ்ந்துகிட்டுந்தாலும் அவங்கமண்ணோடு மண்ணாகறதுக்கு முந்தி சொந்த ஊருக்கு வந்துவாழ்ந்து இந்த வெள்ளக்கோவில் ஊரில தான் அவங்க இறுதி சடங்கு நடக்கணும்னு ஆசைப்படுவாங்களாம், …

அந்த ஊர்ல ஒரு வாடகை வீட்ல புருஷன இழந்துட்டு,கொஞ்ச நாளிலேயே பையன் செந்திலையும் ஊருக்கு அனுப்பிவிட்டுட்டு, பொண்ணு இசக்கியம்மாவ கஷ்டப்பட்டு பத்தாவது வரைக்கும் படிக்க வச்சு, அவ புருஷனோட சர்க்கார் உத்தியோக செட்டில்மென்ட் பணத்தில கொஞ்சத்தையும் செந்தில் அங்கங்க வாங்கி தந்த பணத்தையும் வச்சு மதுரையில ஒரு கவெர்மென்ட் மாப்பிளைக்கு கட்டி குடுத்துட்டு “ஊர்க்காரங்களேயே உறவுக்காரங்களாக்கி வாழ்ந்துகிட்டிருந்தா செந்திலோட அம்மா” ‘விசாலம்’ இன்னைக்கு தேதியில அவளுக்கு 60 வயசுக்கு மேல இருக்கும். கடந்த ஆறேழு வருஷத்துல செந்திலுக்கு கல்யாணம் ஆன பிறகு இரண்டு முனுமுறைதான் மகன் செந்திலயேநேர்ல பார்த்திருப்பா…பேரனுக்கு தன்னோட கணவர் பெயர் வினாயகம்னு தான் வைக்கனும்னு ஆசைப்பட்டா விசாலம்…..
  சரி பரவாயில்ல, பேரா முக்கியம். பேரப்பிள்ளை நல்லா இருந்தா போதும்னு விட்டுட்டுடா….. அவ மருமக பிரியாவ கூட இதுவரைக்கும் நேர்லபார்த்ததே கிடையாது.. “விசாலம் பையன் வேற சாதில ஒரு பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டானாமேனு” ஊர்க்காரங்க கேட்டகேள்விக்கெல்லாம் பதில் சொல்லியே நோய்வாய்ப்பட்டு போயிட்டா….“வீட்டில குடும்பத்தில ஒரு ஆம்பள ஆள் இல்லைனா ஆளாளுக்கு ஆர்டர் போடுற சமுதாயமேச்சே!
இவ்வளவும் தாண்டி இந்த தள்ளாத வயசிலையும், காலையில 4மணிகெல்லாம் எந்திரிச்சு குளிச்சு வீடெலாம் சுத்தம் பண்ணி பரண்ல கிடக்கிற போர்வை, தலையணை எல்லாம் தூசி தட்டி எடுத்துவச்சிட்டு, காலைல டிபனுக்குமுழு உளுந்து தோசையும் வறுத்த சட்டினியும் அரைச்சு வச்சுகிட்டு, மத்தியானம் சாப்பாடுக்கு “சொதி குழம்பு” வைக்கிறதுக்காக இப்பவே தேங்காய்பால் எடுத்துகிட்டே வரப்போற மகன், மருமகள்,பேரப்பிளைகளுக்காக காத்திருந்தா விசாலம்….
  ஆட்டோவும் வீடுவந்து சேர்ந்துச்சு “பிரியாவுக்கு இரண்டு நாள் ஆபீஸ் வேலையோட,சமையல் வேலை மிச்சமான சந்தோசம். செந்திலுக்கு சொந்த மண்ணுக்கு ரொம்ப நாளைக்கு பிறகுவந்ததே பெரிய சந்தோசம். அவன் இரண்டு வயசுக் குட்டி விஷாலினிக்கு இன்னைக்கு முழுக்காவவது நம்ம அம்மா,அப்பா நம்ம கூட இருப்பாங்களேன்ங்கிற சந்தோசம்.ஆனா விதர்ஷனுக்கு தான் ஓரே அழுகையா வருது.ஒரு பார்க், பீஸ்ஸா கார்னெர் கேம்ஸ்னு எதுவுமே இந்த ஊர்ல இல்லையேனு வழி முழுக்க தேடி கழுத்து வலிக்க காத்திருந்தவன். ஆட்டோ நிக்கவும் அதுலேர்ந்து குதிச்சு பாத்ரூம்க்கு ஓடினான் விதர்ஷன், நேத்து ஊர்ல அவன் வீட்டிலதின்ன சீஸ் பீஸ்ஸா வேலைய காட்டுது. வாசலிலையே, மிளவத்தல், உப்பு, கற்பூரம், பூசணிக்காய் சமீபம் கை நடுக்கத்தோடு காத்துகிட்டுருந்தஆச்சி விசாலம்செந்தில் குடும்பத்துக்கு திஷ்டிசுற்றி போட்டா. எல்லாரையும் கட்டிபிடிச்சு முத்த மழை பொழியுறா!…

அதுக்குள்ளே பாத்ரூம் காணாம ஓடி வர்றான் விதர்ஷன். “போன்லேயே ரெண்டுமுனு தடவைதான் பேசிருப்பான் அவன் “அப்பாச்சி” விசாலம் கூட, ஆனா அவனுக்கு அப்படி கூப்பிடறது பிடிக்காது ஆச்சின்னு கூட சொல்லமாட்டான் கடமைக்கு தான் பேசுவான். “நேர்ல விசாலம் ஆச்சிய சட்டையில்லாம பார்த்தவனுக்கு அதிர்ச்சி, அம்மா பிரியா பின்னாடி வந்து ஒளிஞ்சுகிட்டான். விதர்ஷனுக்கு தங்கச்சி விஷாலினி மேல பாசம் அதிகம்” அத ஆச்சி எடுத்து கொஞ்ச பிடுங்கி அம்மாகிட்ட கொடுக்கிறான்…
  சட்டுன்னுவிசாலம் மூஞ்சு சுருக்கம் இன்னும் கூடிடுச்சு, சரி பேரன் தானேன்னு கோபப்படாம விதர்ஷன பிடிச்சு ஒரு முத்தம் கொடுக்கிறா அசிங்கப்பட்டு ஒரு முத்ததிலேயே முகத்த திருப்பிக்கிறான். “அப்புறம் செந்தில் அவன கூட்டிட்டு வயக்காட்டு பக்கம் போய் ரொம்ப நாளைக்கு பிறகு சுதந்திரமாக காலை கடன்களை முடிஞ்சிட்டு வெள்ளக்கோவில் ஆற்றுக்கு குளிக்கவர்றான்” சுத்தி உள்ள ஊரில நெறைய சலவை தொழிலாளிகள் இங்க வந்து துணி துவைப்பாங்க இந்த தண்ணிக்கு அழுக்கு இருந்த இடம் தெரியாம போகுதாம்.ஆனா’ ஒரு வாளி தண்ணியில அதுவும் வெண்ணியிலேயே குளிச்சு பழகின விதர்ஷனுக்கு, கடல் மாதிரி ஓடுற தண்ணிய பார்த்ததும் பயம் ஒட்டிகிச்சு’ பக்கத்தில துணி துவைச்சுகிட்டுருந்த அக்காகிட்ட ஒரு வாளிய வாங்கி தண்ணிய கோரி கோரி குளிச்சான்.ஆனாசெந்தில் தண்ணிக்குள்ள இருந்து வெளிய வர ரொம்ப நேரமாச்சு.

   குளியல முடிச்சு அப்பா பிள்ளைரெண்டு பேரும்வேகமா நடைய கட்டி வீடு வந்து சேர்ந்தாங்க.உள்ள வந்த விதர்ஷன் அவன் ஆச்சிகிட்ட இருந்து பத்து அடி தள்ளி உட்கார்ந்து அவங்க அம்மா ஊட்டிவிட்ட முழு உளுந்துதோசையை விழுங்கினான்.” எள்ளுப் பொடி வேணுமா ராசா"னு கேட்ட ஆச்சிய முறைச்சான். அதுக்குள்ளே அந்த தெருவில உள்ள பலபேர் வந்து விசாலம் மகன்,அவன் பொண்டாட்டிபிள்ளைகள்லபார்த்து விசாரிச்சிட்டு போயிட்டாங்க. அப்ப பக்கத்து வீட்டு வள்ளி வந்து ‘கலி’ கொடுத்தா,என்னனுன்னு கேட்ட விசாலத்துக்கிட்ட ஒரு பெரிய கதைய சொன்னா நம்ம கொய்யாமர தாத்தா பேத்தி உட்கார்ந்துட்டாளாம்.(பெரிய பொண்ணா ஆனதத்தான் அப்படி சொல்றா) அதுக்கு தான் ஊர்க்காரங்களுக்கு கலி கிண்டி போடுறாங்கலாம்னு சொல்லிட்டு போயிட்டா…

  “விசாலம் அதுல ஒரு ஊருண்டைய எடுத்து விதர்ஷன் தட்டுல கொண்டு வந்து போட்டா” ஊர்ல அப்பார்ட்மென்ட்ல பக்கத்து வீட்ல பண்டிகைக்கு கூட பலகாரம் வாங்கி சாப்பிட்டு பழக்கம் இல்லாத விதர்ஷனுக்கு, நாலாவது தெருவில உள்ள கொய்யாமர தாத்தா பேத்தி பெரியவளானதுக்கு கொடுத்துவிட்டபுது சாப்பாட பார்த்து ஆச்சிரியமா தான் இருந்துச்சு.கருப்பா இருந்ததால கசக்குமோனு கலியதூர ஒதுக்கி வச்சுட்டான்.“கானாததது கண்ட மாதிரி ஓடிவந்து செந்தில் அந்த கலி ஊருண்டையில கொஞ்சத்த எடுத்து வாயில போட்டான்”

   இப்படி ஒரு நாளுக்கு பனைமரத்தில ஆரம்பிச்சு தட்டாம் பூச்சி வரைக்கும் பல ஆச்சிரியங்கள விதர்ஷனுக்கு கொடுத்தது அந்த வெள்ளக்கோவில் கிராமம். டி.வி, வீடியோ கேம் மறந்து முழுசாஒரு பகல் கழிஞ்சது இன்னைக்கு தான் அவனுக்குமுதல் முறை. ராத்திரி வந்துச்சு,விசாலம் ‘கேப்பை உப்புமா’ செஞ்சு கொடுத்தா அத பார்க்கவே பிடிக்கல விதர்ஷனுக்கு,ஆச்சிய பாப்பா பக்கத்தில விடக்கூடாதுங்கற வைராக்கியத்தோட அவன் தங்கச்சி விஷாலினிகுட்டிபாப்பா பக்கத்திலேயே உட்கார்ந்துகிட்டான்… இப்படி அவன் அடம்பிடிப்பானு தெரிஞ்சே அவங்க அம்மா பிரியா கையோட கொண்டு வந்த 2 மினிட்ஸ் நூடில்ஸ் அவனுக்கு செஞ்சு கொடுத்தா அத சாப்பிட்டு படுக்க போயிட்டான் விதர்ஷன்.எல்லாரும் தான்.

தீடீருன்னு விஷாலினி குட்டி அழ ஆரம்பிச்சிட்டா…என்னனு தொட்டு பார்த்த பிரியாவும் அழுறா, குழந்தைக்கு உடம்பு நெருப்பா கொதிக்குது. வெளியூர் தண்ணி,காற்று ஒத்துக்காம குழந்தைக்கு ஜுரம் அடிக்குது. ராத்திரில, அதுவும் இந்த கிராமத்தில எந்த ஆஸ்பத்தரிக்கு போறது செந்திலுக்கும்,பிரியாவுக்கும் ஒன்னும் ஓடல,விதர்ஷனுக்கும் தூக்கம் வரல.விசாலம் எதோ பத்தியம் செஞ்சு குடுக்கிறா,அத எதையுமே பாப்பாவுக்கு கொடுக்க விட மாட்டிக்கிறான் விதர்ஷன்.

  குழந்தையோட அழுகை சத்ததோட அன்னைக்கு ராத்திரி கழிஞ்சது.மறுநாள் விடிஞ்சதும் ஆச்சி வீட்டுஸ்டோர் ரூம்ல அவங்க அப்பா விளையாண்ட குதிரை,மரப்பாச்சி பொம்மை, பல்லாங்குழி, செப்பு சாமான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுருக்கான் விதர்ஷன்.. அப்ப பக்கத்து ரூம்ல பிரியா செந்தில்கிட்ட சண்டை போடுட்டுருக்கா, " இதுக்கு தான் இந்த கிராமத்துக்கே வரமாட்டேன்னு சொன்னேன். இப்ப பாரு செந்தில் இப்படி குழந்தைக்கு உடம்பு சரியில்லாம ஆயிடுச்சுன்னு புலம்புறா.”…..

  இன்னைக்கு சாயங்காலமே பஸ்ல ஊருக்கு போறோம்னு ஆர்டரும் போடுறா, விதர்ஷன்.அப்பா அம்மா சண்டைய பார்த்து பயந்தாலும் இன்னைக்கு ஊருக்கு கிளம்பலாம்னு அவங்க அம்மா சொன்னத கேட்டு சந்தோஷப்பட்டான்.அதுக்கப்புறம் அவன் ஆச்சி வீட்டுக்குளேயே வரல வெளியில திண்ணையிலேயே கையில சிப்ஸ் பாக்கெட்டோட செட்டில் ஆயிட்டான்.அப்பப்ப ஜன்னல் வழியா பாப்பாவ எட்டிப்பார்த்துப்பான்.

  செந்திலும் பிரியாவும் அவங்க அம்மா விசாலம் வற்புறுத்தி சொன்னதுக்காக பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்ல உள்ள குழந்தைகள்நல சிறப்பு மருத்துவர் ஆனா அந்த சுத்து பத்து ஊரில எல்லா வயசுக்காரங்களுக்க்கும் ட்ரீட்மென்ட் பண்றவர் டாக்டர் “திருமலை கொழுந்து” எவ்வளோ பெரிய நோயா இருந்தாலும் ஊசி போடாம மாத்திரைலேயே சரியாக்கிருவாரு அதனால எப்பவுமே கூட்டம் மொய்க்கும்.அத்தன பேர்கிட்டயும் அவர் பழகிறதுலேயே வர நோயாளிகளோட உடம்பு சரியாயிரும் .அவரோடஆஸ்பத்தரிக்கு குழந்தையகூட்டிட்டு போய்மாத்திரை வாங்கி கொடுத்துட்டு வந்தாங்க. வீட்டுக்குள்ள வந்த பிரியா விஷாலினிய படுக்க வச்சுட்டு ஆற்றுக்கு போய் குளிக்கபயந்து வீட்டு பக்கம் இருக்கிறசின்ன முடுக்கு பாலம்மாச்சி வீட்டு பாத்ரூம்க்கு குளிக்க போயிட்டா.இப்பகுழந்தைக்கு விசாலம் தான் காவல்.

  செந்திலும் பாளையங்கோட்டை மார்க்கெட்ல போய் லாலாகடையில சென்னை நண்பர்கள் வாங்கிட்டு வர சொன்ன அல்வா, மிக்சர்லாம் பார்சல் வாங்குறதுக்கும், வடக்கு பஜார்லஅவனோடபழைய நண்பர்கள் கடைகளுக்கு போய் குசலம் விசாரிக்கிறதுக்காகவும் ,அவன் ஹை ஸ்கூல் பிரெண்டு பாபுகிட்ட சைக்கிள் கடன் வாங்கிட்டு கிளம்பிட்டான்.அந்த ஊர்ல செந்தில தெரியாத ஆட்களே கிடையாது. அவன் அவ்வளவு பேமஸ்,அதெல்லாம் ஒரு காலம் இப்ப பல பேருக்கு அவன் முகமே மறந்து போச்சு .

   இங்க வீட்ல விதர்ஷன் வெளியில வேடிக்கை பார்த்துகிட்டிருக்கான். உள்ளே விஷாலினி அழ ஆரம்பிச்சுடுச்சு. காய்ச்சலோட துணைக்கு வந்த சளி, அந்த பிஞ்சு மூக்க அடைச்சுகிட்டு மூச்சு விட சிரமப்படுத்துது. குழந்தை கதறுது. அப்ப சரியா பிரியாவும் அங்க வர்றா குழந்தைய எடுத்து அவ சேலைய வச்சு மூக்க பிசுக்க குழந்தை இன்னும் அதிகமா கதறி அழுது. வித்ர்ஷனும் தங்கச்சி பாப்பா கதறி அழுறத பார்த்து அழ ஆரம்பிச்சிட்டான் ஓடி வந்து பிரியாவோட கால் ரெண்டையும் கட்டி பிடிச்சுகிட்டான். இதெல்லாம் ஓரமா நின்னு பார்த்துகிட்ட்ருந்த விசாலம். குழந்தைய வாங்கி கையால மூக்க தொட்டா எங்க குழந்தைக்கு வலிக்குமோனு அந்த பிஞ்சு முகத்தில வெள்ளி பனி மாதிரி வடியுற சளிய, தன்னோட பொக்கை வாயால மூக்கிலேர்ந்து உறிஞ்சி எடுக்கிறா, அருவருப்பு படல மாறா அவ ஆனந்தப்படுறா, கொஞ்ச நேரத்தில மேல்டாப்பில (மேலாக) அடைச்சிருந்த சளிய முழுக்க கொஞ்ச கொஞ்சமா விசாலம் உறிஞ்சி எடுத்திட்டா இப்ப காற்று சீரா வர குழந்தை அழுறத நிறுத்துது.ஆச்சிகிட்ட வர்ற விதர்ஷன் விஷாலினிய பிடுங்க பாக்குறான் அது அவன பார்த்து சிரிக்குது…

  குழந்தைய பிரியாக்கிட்ட குடுத்துட்டு திரும்பி பேரன பார்க்கிறா விசாலம்,அவ வாய் முகமெல்லாம் பனி படர்ந்த மாதிரி சளி படர்ந்திருக்கு.தன்னோட சேலை முந்தனையால அத தொடைச்சிகிட்டு உள்ள போய் தனி ஆளா சமையலமுடிச்சு பார்த்து பார்த்து எல்லாரையும் கவனிக்குறா பக்கத்து வீட்டு பையன்கிட்ட சொல்லி வாங்கி வச்சிருந்த சாக்லெட் பிஸ்கெட்டெலாம் விதர்ஷனுக்கு எடுத்து குடுக்கிறா,பிரியா கூட குழந்தை பக்கத்தில படுத்து தூங்கிட்டா,விசாலம் அந்த இடத்த விட்டு நகரல, தீடிருன்னு விஷாலினி முழிச்சுஅழுகுது அத தட்டி குடுத்து அப்பப்ப அதுக்கு மூக்கடைக்கும் போதெல்லாம் சளியஉறிஞ்சி எடுத்து விடுறா விசாலம். இதெல்லாம் அமைதியா பார்த்துகிட்டேயிருக்கான்விதர்ஷன் .

அப்ப வீட்டுக்குள்ள வர்ற அவன் அப்பா செந்தில் " சாயங்காலம் சென்னை பஸ்சுக்கு டிக்கெட் எடுத்துட்டு வந்துட்டேன். பிரியா இன்னும் ஒருமணிநேரத்தில கிளம்பனும் எல்லாம் எடுத்துவைங்கிறான் “நேரம் போகுது செந்தில் பேமிலிகிளம்பி ரெடியாகிட்டாங்க, அவங்களபுது பஸ்டாண்டு கூட்டிட்டுபோகஆட்டோவும் வந்துடுச்சு.எல்லாரும் ஏறி உட்கார்ந்துட்டாங்க. இரண்டுநாள் இப்படி வேகமா ஓடி போச்சேன்னு வருத்தத்தோடு மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் வழியனுப்பிறா விசாலம்.ஆட்டோ மெதுவா கிளம்புது.அதுவரைக்கும் அமைதியா இருந்த விதர்சன் வேகமா வெளியில எட்டி பார்க்கிறான்.கொஞ்ச நேரம் அப்படியே அவன் ஆச்சியபார்த்துக்கிட்டே இருக்கான்.அவங்களுக்குள்ள இடைவெளி கொஞ்சமா கொஞ்சமாஅதிகரிச்சுகிட்டிருக்கு,ஏதோ ஞாபகம் வந்தவனா தீடிருன்னு “டாட்டாஅப்பாச்சி, அப்படின்னுகத்திசொல்றான் .ஆனா அவன் குரல் அவன் அப்பாச்சி விசாலம் காதுல விழுகுறதுக்குள்ள அவங்க போய்கிட்டிருக்கிற ஆட்டோ ரொம்ப தூரம் போயிடுச்சு………..

இப்படிக்கு

திருநெல்வேலியிலுருந்து:மு.வெங்கட்ராமன்…

powered by theVinesh