வணக்கம் நண்பர்களே,
நேற்று (04-05-2025) இளையராஜா அவர்களுடைய சந்திப்பு பற்றிய புகைப்படத்தை சமூக வலைதலங்களில் பகிர்ந்த உடன் நிறைய சென்னை நண்பர்கள் எங்களையும் அழைத்து சென்றிருக்கலாமே என்று கேட்டார்கள். இது மரியாதை நிமித்தமான சந்திப்போ ரசிகர்களாக நேரில் போய் சந்தித்த சந்திப்பு அல்ல. தொழில் ரீதியாக நான் நிர்வாக தயாரிப்பாளராக இருக்கும் ஒரு ப்ராஜெக்ட்க்காக கிட்டத்தட்ட ஜனவரி மாதத்தில் இருந்து நான்கு மாதமாக ஃபாலோ அப் செய்து அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்து பார்க்க சென்ற சந்திப்பு. அதனால் தான் திடீர் அனுமதி யாரையும் அழைத்து செல்ல முடியவில்லை.
மக்கள் டிவியில் இருக்கும் போது இரண்டு முறை பின்னர் ஹலோ எஃப் எம் எல் மதுரையில் நாங்கள் நிகழ்ச்சி நடத்தும் போது ஒரு முறை திருநெல்வேலி நிகழ்ச்சியில் ஒரு முறை வேறு ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஒரு முறை என்று 5,6 முறை அவரை நேரில் சந்தித்துள்ளேன் நெருக்கமாக பார்த்து புன்னகைத்துள்ளேன்.
எல்லோரும் போல அவருடைய பாடல்கள் பிடிக்கும் என்றாலும் புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைக்காததால் அதை பெரியதாக நினைக்கவில்லை. ஆனால் நேற்று நாங்கள் சந்திப்பதற்கு முன்பு ஒரு சிலர் அங்கே குழுமி இருந்தனர். பாடகி சுவேதா மோகன் விஜய் டிவி குட்டி சிங்கர்ஸோடு வந்திருந்தார். இன்னும் சில நபர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார்கள்.
அவர்களெல்லாம் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்து அவருடைய உதவியாளர்களில் ஒருவரான அரங்கநாதன் என்பவரிடம் பகிர்ந்து கொண்ட வார்த்தைகளும் அவர்களின் மகிழ்ச்சியும் பார்க்கும் போது ஒவ்வொரு ரசிகர்களும் எந்த அளவிற்கு இசையை தாண்டி அவர் மேல் ஒரு அபிமானத்தோடு இருக்கிறார்கள் அவரை சந்தித்ததையே ஜென்ம சாபல்யம் அடைந்ததாக நினைத்து பேசிக் கொள்கிறார்கள் என்பதை உணரும் போது வியப்பாக இருந்தது.
நாங்கள் ஒரு சில நிமிடங்கள் தான் பேசினோம் எங்களுடைய ப்ராஜெக்ட் பற்றி பேசிவிட்டு புத்தகம் ஒன்றை பரிசாக கொடுத்துவிட்டு நான் திருநெல்வேலியில் இருந்து வாங்கி சென்ற திருப்பாகம் ஸ்வீட் கொடுத்தேன். ஆனால் அவர் நான் இனிப்பு சாப்பிட மாட்டேன் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஒரு பூங்கொத்து மட்டும் கொடுத்துவிட்டு புகைப்படம் எடுத்துவிட்டு கிளம்பி வெளியில் வந்து கொஞ்ச நேரம் அவருடைய உதவியாளருடன் பேசிக்கொண்டு இருந்தேன்.
அங்கே மைலாஞ்சி பட கம்போசிங் காக வந்திருந்த எழுத்தாளர் திரைக்கதை ஆசிரியர் நடிகர் பாலு மகேந்திரா நூலகம் உரிமையாளர் இயக்குனர் அஜயன் பாலா அவர்களின் சந்திப்பு இன்னொரு சர்ப்ரைஸ் மகிழ்ச்சி. ஒவ்வொரு நாளும் நான்கு மணிக்கு எழுந்து ஆறு மணிக்கு ஸ்டுடியோ வந்து விடுவாராம். ஒன்பது மணி வரை பல்வேறு வேலைகளை முடித்துவிட்டு ஒரு அரை மணி நேரம் தினமும் தன்னை சந்திக்க உலகம் முழுவதும் இருந்து வருபவர்களுக்காக பொறுமையோடு பேசி புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொன்ட போது இன்னும் வியப்பாக இருந்தது.
நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது வாகனம் வெளியில் வந்து அதில் ஏறி கிளம்பி சென்று விட்டார். ஒரு பக்கமாக பத்திரிக்கையாளர்களிடம் கோபமாக நடந்து கொள்கிறார் என்றும் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றியும் அடிக்கடி சில விமர்சனங்கள் இணையத்தில் வந்ததை பார்க்கும்போது அவரவர் சூழ்நிலையில் இருந்து பார்த்தால் தான் சில விஷயங்கள் புரியும் என்பதை உணர முடிகிறது.
இந்த வயதில் நமக்கு இருக்கக்கூடிய வேலைப்பளுவில் சிறியதாக நம்மிடம் கூட இரண்டு கேள்வி மனைவியோ தாயோ கேட்கும் போதே நமக்கு கோபம் அவ்வளவு வருகிறது. 80 வயது களை கடந்து எல்லா சாதனைகளையும் பார்த்து புகழின் உச்சகட்டத்தை உணர்ந்த ஒருவர் இப்பொழுதும் ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் போது பல்வேறு சிந்தனைகளிலும் பல்வேறு விஷயங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கேள்விக்கனைகளால் தொல்லை கொடுக்கும்போது அதுவும் அவசியம் இல்லாத கேள்விகளை கேட்டு வெறுப்பேற்றும் போது சில நேரங்களில் கோபம் வருவது இயல்புதான்.
திருநெல்வேலியில் நடந்த கச்சேரியில் 2கே கிட்ஸ் என்ஜாய் செய்ததை பார்த்தபோதும், இங்கே அவரைப் பார்க்க வந்திருந்த 2கே கிட்ஸ் சிலரை பார்த்த போதும் புரிந்து கொண்டது என்னவென்றால் அவர் 80ஸ் 90ஸ் இசையமைப்பாளர் அல்ல இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அந்த காலகட்டத்தில் உள்ளவர்களாலும் ரசிக்கப்பட்டு கொண்டே இருக்கப் போகிறார் ஒரு இசை அமைப்பாளர் என்பதுதான்.
அன்புடன்
M.V.R Infotainer