MVR Infotainer

இரா.முருகன்

வணக்கம் நண்பர்களே,

இரா.முருகன்

இன்று என் அப்பா இரா.முருகனின் நினைவுநாள் இதே போன்ற ஒரு சனிக்கிழமை இன்றிலிருந்து 22 ஆண்டுகளுக்கு முன் 13-12-2003 அன்று அதிகாலையில் அதற்கு முந்தைய 3 வருட மருத்துவமனை சிகிச்சை போராட்டம் எல்லாம் ஓய்ந்து தாங்கமுடியாமல் தூக்கத்திலேயே பாளையங்கோட்டை ஹை கிரவுண்ட் அரசு மருத்துவமனையில் வைத்து காலமானார்.

அப்பா இறந்த போது எனக்கு சரியாய் 15 வயது அதற்கு முந்தைய 3 வருடம் என் 12 வயது முதல் அவரை நான் மருத்துவ சிகிச்சையில் தான் பார்த்து வந்தேன். எனக்கு நினைவு தெரிந்த வயதில் இருந்து 4,5 ஆண்டுகள் மட்டுமே அவர் உடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தத., பணி காரணமாக அவர் வெளியூரிலேயே பல வருடங்கள் வேலை பார்த்து வந்ததால் அவர் எந்த ஊருக்கு மாறுதல் ஆகிச் சென்றாலும் எங்களை உள்ளூரிலேயே வைத்து எந்த சிரமமும் இல்லாமலே வளர்த்தார்.

எதையும் கேட்டு எதிர்பார்க்கும் சூழ்நிலையில் வைத்ததே இல்லை. அப்பாவை அவர் இருந்த காலத்தில் பெரிதாய் உணர்ந்ததே இல்லை. அதிகம் வெளியூரிலே வேலை பார்த்து எப்போதாவது ஒருநாள் வீட்டிற்கு வரக்கூடிய ஒரு சூழல் வந்தாலும் சில மணி நேரங்கள் மட்டுமே உடனிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் விளையாட்டு பருவம் என்பதால் வந்ததும் ஒரு நிமிடம் பேசிவிட்டு வெளியில் இருந்த காலமே அதிகம்.

மிகவும் நெருங்கிய உறவினர் வீட்டு விசேஷங்களில் ஒரு சில மணி நேரங்கள், அதிலும் பெரிய நினைவுகள் இல்லை. அப்பா என்று நினைத்தால் வீட்டில் தங்கையோடு சேர்ந்து என்னை பயமுறுத்த செய்த கலாட்டாக்களும், அவரோடு சைக்கிளில் எங்கள் வீட்டில் இருந்து அப்போது பெருமாள்புரத்தில் இருந்த அப்பாச்சி வீட்டிற்கு சென்ற நினைவுகளும், ஒரே ஒரு முறை ஒட்டுமொத்த வாழ்வில் அந்த ஒரே ஒருமுறை மட்டுமே அப்பாவோடு சுற்றுலா சென்றேன். அவர் நல்ல உடல் நிலையில் இருந்த போது கன்னியாகுமரி சுற்றுலா அந்த ஒரு நாள் என்னுடைய ஏழாம் வகுப்பில் 1999 ஆவது ஆண்டில் அது மறக்க முடியாது.

மற்றபடி அப்பாவோடு படத்திற்கோ , வேறு எந்த பெரிய பொழுதுபோக்கு இடங்களுக்கோ சென்றதே இல்லை. ஓரளவுக்கு விவரம் தெரிந்த பன்னிரண்டாவது வயதிற்கு பிறகு அவரை மருத்துவமனையில் தான் பார்த்தேன் மருத்துவ சிகிச்சைக்காக அவரோடு நிறைய பயணம் செய்துள்ளேன் அவர் உடல் நலிந்து சோர்ந்து போயிருந்த நேரத்தில் நிறைய அவரோடு இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரங்களில் தான் பாசம் அதிகரித்தது. வாழ்க்கை புரிய தொடங்கியது. அவர் இறந்த 15ஆவது வயதிலிருந்து குடும்பத்தை தாங்கும் சக்தி கிடைத்தது.

அவர் இறுதிக்காலம் நிச்சயம் பிரிந்து போய்விடுவார் என்ற நிலையை உணர்ந்து நாட்களைக் கடத்தியது வேதனையின் உச்சம். சாகுற நாள் தெரிஞ்சிட்டா வாழுற நாள் நரகம் ஆயிடும் அப்படின்னு ஒரு சினிமா டயலாக் வரும். இது சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டும் இல்ல அவரை சுற்றி இருப்பவர்களுக்கும். 2003 ஆவது வருடம் செப்டம்பர் மாத அளவிலேயே பாளை ஹைகிரௌண்ட் அரசு மருத்துவமனை மருத்துவர் இன்னும் அதிகபட்சம் மூன்று மாதங்கள் தான் உங்கள் அப்பா உயிரோடு இருப்பார் என்று 15 வயது சிறுவனிடமும் அவன் தாயிடமும் அவன் தந்தையிடமும் தனித்தனியாக வெவ்வேறு சூழ்நிலையில் சொல்லிவிட்டார்.

மூவரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் அந்த மழைக்காலத்தில் மழையோடு கண்ணீரிலேயே மூன்று மாதத்தை கடத்தினோம். டிசம்பர் 13 2003 அதிகாலையில் குடிக்க ஹார்லிக்ஸ் கேட்டு இருக்கிறார் அப்பா. அம்மா அதை கொடுக்க அதை வாங்கி குடித்துவிட்டு தூக்கத்திலேயே இறந்துவிட்டார்.

காலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எனக்கு அப்பா சீரியஸாக இருக்கிறார்கள் என்று பக்கத்து வீட்டு லேண்ட் லைனுக்கு மருத்துவமனையில் இருந்து ஃபோன் வந்தது. பக்கத்து வீட்டில் குடி இருந்த ராதா அண்ணனை அழைத்துக் கொண்டு அவர் காரில் மருத்துவமனை சென்றேன். தூரத்தில் வரும்போதே காரிடாரில் நின்று கொண்டு அம்மா அழுது கொண்டு அப்பா இறந்து விட்டார் என்ற செய்தியை சொல்ல, தூக்குவதற்கு கூட யாரும் வரவில்லை அந்த மருத்துவமனையில் அந்த நேரத்தில் நானும் ராதா அண்ணனும் ஆம்புலன்ஸ் டிரைவரும் இணைந்து அங்கிருந்து வீட்டிற்கு கொண்டு வந்தோம்.

வீட்டிற்கு வந்ததும் முழுவதும் அண்டை வீட்டார்களே செய்தார்கள். அத்தனை சடங்குகளையும் செய்து பிரீசர் பாக்ஸ் இல் வைத்து மறுநாள் 14 ஆம் தேதி காலையில் தகனம் என்று எல்லோருக்கும் சொல்லி கூட்டம் கூட்டமாக நண்பர்கள் உறவினர்கள் என்று எல்லோரும் வந்தார்கள். 33 வருடம் காவல்துறை பணியை நிறைவு செய்து தனக்கு வந்த இன்ஸ்பெக்டர் ப்ரமோஷனை கூட வேண்டாம் என்று உடல்நிலை காரணமாக தள்ளி வைத்து, காலில் அடிபட்டதனால் பைக் கூட வாங்காமல் இறுதிவரை சைக்கிளிலேயே சென்று வந்த மூன்று சட்டை மூன்று பேண்ட் அதுவும் கரண்டைக்கு மேல் ஏறிய கட்டை பேண்ட் சாயம் போன சட்டை கடைசி காலம் முழுவதும் கழுத்தில் ஒரு பெல்ட், ரப்பர் செருப்பு, ஒரு சிம்பிளான சோல்டர் பேக் அவ்வளவுதான் அவருடைய சொத்து.

பணியாற்றிய காலம் முழுவதும் சிறப்பு குற்ற புலனாய்வுத் துறையில் இருந்ததால் ஒருமுறை கூட அவர் காக்கி சட்டை அணிந்து நான் பார்த்ததில்லை. எங்கள் ஏரியாவில் கூட யாருக்கும் அவர் காவல்துறையை சேர்ந்தவர் என்று தெரியாது அவர் அப்படி நடந்து கொண்டதே கிடையாது. அந்த காலகட்டத்தில் என்னுடன் படித்த மாணவர்கள் சிலருடைய தந்தை காவல்துறை டிரைவராக இருப்பார்கள் அவர்கள் அனைவரிடமும் வந்து எங்க அப்பா போலீஸ்டா என்று மிரட்டி கொண்டிருப்பார்கள்.

நான் ஒரு நாள் கூட அப்படி சொல்லியது கிடையாது என்ன என் அப்பா அப்படி சொல்ல விட்டதும் கிடையாது. அவர் இறந்து வீட்டின் வாசலில் துப்பாக்கி சுட்டு மரியாதை கொடுக்கும் போது மட்டுமே காவல்துறையில் இருந்தவரா என்று பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிந்தது. அந்த அளவுக்கு ஒரு எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.

உறவினர்கள் பலரோடு நெருக்கமாகவே இருந்தவர். அதற்கு சாட்சியாக அவரைப்பற்றி அவர் இருந்த காலமும் சரி இறந்ததற்கு பிறகான இந்த 22 வருட காலத்திலும் சரி, ஒவ்வொரு உறவினர்களும் சொன்ன நிகழ்வுகள் தான் எனக்கான அவரைப் பற்றிய நிரந்தர நினைவுகள். அதையும் தாண்டி எங்கள் வீட்டைவிட மிகப்பெரிய அளவில் அவருடைய புகைப்படத்தை பிரேம் செய்து அவர்கள் வீட்டில் இன்றும் வணங்கி கொடுக்கக் கூடிய உறவினர்கள் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு எல்லோரோடும் மனதில் இடம் பிடித்தவர்.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவர். எனக்கு நினைவு தெரிந்து அவரைப் பற்றி யாரும் எந்த குற்றமும் சொன்னதில்லை. கடைசி பத்து ஆண்டுகளில் காது கேளாத குறைபாடு இருந்தது. அதையும் பெரிதாக காட்டிக் கொள்ளவில்லை சமாளித்து வாழ்ந்து விட்டார். வாழ்நாள் முழுவதும் விடுமுறையே எடுக்காமல் 17 வயதில் இருந்து வேலை பார்த்ததாலோ என்னவோ கடைசி உடல்நிலை சரியில்லாத மூன்று வருடங்கள் சம்பளத்தோடு விடுமுறை கிடைத்தது இதற்குப் பிறகு லாஸ் ஆஃப் பே வரும் என்று சொன்ன ஒரு சூழலில் அதற்கு முந்தைய மாதத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவருக்காக அவர் எதையுமே ஆசைப்பட்டு வாங்கி அனுபவித்ததே கிடையாது. என்னுடைய குடும்பத்தின் நிலையை ஓரளவு உயர்த்தி வந்து தங்கை திருமணம் செய்து அந்த கடன் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவதற்குள் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வராமல் இறந்துவிட்டார்.

உண்மையில் அவர் வாழ்ந்த காலத்தில் அப்பாவை நான் பெரிதாக உணரவில்லை. எங்களிடம் நினைத்துப் பார்க்க ஒரு குடும்ப புகைப்படம் கூட இல்லை. அசுரன் படத்தில் ஒரு வசனம் வரும் தனுஷின் மகன் இறந்ததற்கு பிறகு அவன் புகைப்படம் கூட இல்லையே அவன் முகம் இன்னும் சில வருடங்களில் நினைவில் இருந்து மறைந்து போகுமே என்று தனுஷ் புலம்பி தவிக்கும் ஒரு காட்சி வரும்.

அப்படி புலம்பி போகாத அளவிற்கு எங்களுக்கு ஒரே ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மட்டும் கிடைத்தது அது தான் இந்த இணைப்பில் நான் பகிர்ந்து உள்ளது. அதைத் தாண்டி ஒன்று இரண்டு உறவினர்கள் வீட்டு நிகழ்வில் மணப்பெண் மணமகளுக்கு இரு புறம் அப்பா அம்மா நாங்கள் இருக்கும் ஒரு புகைப்படம் கிடைத்தது. அவ்வளவுதான் முகம் மறந்து போகாது. எத்தனையோ மனிதர்களின் முகம் நமக்கு மறந்து இருக்கலாம் குரல் மறந்து இருக்கலாம் ஆனால் அவர்களின் நினைவுகள் அவர்கள் நமக்கு கொடுத்துச் சென்று நினைவுகள் நாம் உயிரோடு இருக்கும் வரை மறந்து போகாது.

அப்பா நான் ஹீரோவாக நினைத்துப் பார்க்க பின்பற்ற பல குணநலன்களை கொண்டிருந்தார்.அவர் வாழ்ந்த காலத்தில் அதை எதையுமே நான் உணர்ந்ததில்லை. அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் எதையும் செய்ததும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் அவருக்கு கெட்ட பெயராகும் வகையிலும் எதையும் செய்ததில்லை. அது அவருடைய வழக்கு அக்கறையான அறிவுரையின் மூலம் கிடைத்த வழிகாட்டுதல் காரணத்தால் மட்டுமே நிகழ்ந்தது.

அவர் வாழ்ந்ததற்கு பிறகு பல பேர் சொல்லி நினைத்துப் பார்த்து அவரின் பெருமைகளை உணர்ந்ததே அதிகம். இன்று நான் ஒரு நல்ல அப்பாவாக என் மகன் வியன் நேசிக்கும் வண்ணம் இருப்பதற்கு காரணமும் இன்னும் பல பேரை நல்ல அப்பாவாக மாற்ற பள்ளி கல்லூரி என்று தேடித் தேடிப் போய் நான் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயங்களுக்கு காரணமும் அவர் மட்டுமே. இன்று பலருக்கும் நான் ஹீரோவாக தெரிகிறேன். அவர்கள் வாழ்க்கை மாற்றத்துக்கு ஏதோ ஒரு காரனியாக நான் இருக்கிறேன் என்று தினம் தினம் யாராவது ஒருவர் என்னை பார்த்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு நிச்சயம் என் அப்பா மட்டுமே காரணம்.

அவர் எனக்கு சொல்லிய ஒரு சில அறிவுரைகள் என்னை செதுக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது அதை நான் போகும் இடமெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு நான் எதையும் செய்யவே இல்லை. ஆனால் அவரை நினைத்து ஏராளமாக செய்து கொண்டே இருக்கிறேன். இன்னும் பல நூறு வருடங்கள் கடந்தாலும் அவர் பெயரையும் என் பெயரையும் சொல்லும் அளவுக்கு செய்து விட்டு தான் இந்த உலகை விட்டு மறைவேன்.

முதல் சில வருடங்கள் சரி அதற்கு பிறகு நான் திதி என்று தனியாக எதையும் கொடுக்கவில்லை அவர் இறந்த தினத்தில் ரோடு ரோடாக சென்று என்னால் இயன்றவர்களுக்கு உணவளித்துள்ளேன். இந்த வருடமும் கொடுத்தேன். அதையெல்லாம் தாண்டி அவர் நினைவாக தினம் என் வாழ்வில் குறைந்தபட்சம் இரண்டு பேருக்காவது ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்பதை என் வாழ்வின் வழக்கமாக்கிக் கொண்டேன். ஏராளமானவருடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உருவாக்க நான் ஒரு காரணமாக இருக்க வேண்டும் என்பதையும் உறுதி எடுத்துக் கொண்டேன் அதை இன்றளவும் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக அவருடைய ஆன்மா எங்கிருந்தாலும் சாந்தி அடைந்திருக்கும் என்று நம்புகிறேன்.

அந்த ஆன்மா பெருமைப்பட்டுக் கொண்டே இருக்க என்னால் இயன்றதை செய்தேன் செய்கிறேன் இன்னும் இன்னும் அதிகமாய் செய்வேன்.

அன்புடன்
M.V.R Infotainer
பாளையங்கோட்டையிலிருந்து