MVR Infotainer

மறக்க முடியாத மனிதநேயம்

சில மனிதர்களை சந்திப்பது ஒரு நிகழ்வு… அவர்களை நினைவில் வைத்திருப்பது ஒரு வாழ்நாள் அனுபவம். ❤️

வெங்கட்ராமன் முருகன்

மறக்க முடியாத மனிதநேயம்

இந்த புகைப்படம் ஒரு ஷூட்டிங் முடிந்த பிறகு எடுக்கப்பட்டது. அவர் அணிந்திருக்கும் அந்தப் புதிய T-shirt-க்கு பின்னால் எனக்கு மறக்க முடியாத ஒரு தனிப்பட்ட நினைவு இருக்கிறது.

2009–2010 காலகட்டம். நான் மக்கள் தொலைக்காட்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம்.

அப்போது, “பத்து நிமிடக் கதைகள்” என்ற குறும்பட நிகழ்ச்சியை, “நாளைய இயக்குநர்” நிகழ்ச்சிக்கு முன்னோடியாக நாங்கள் செய்து கொண்டிருந்தோம். அந்த நிகழ்ச்சியின் இயக்குநராக நான் இருந்தேன். ஒவ்வொரு வாரமும் ஒரு நடுவர் என்ற வகையில் தமிழ் சினிமா மற்றும் இலக்கிய உலகின் பல்வேறு ஆளுமைகளை அழைத்து வந்தோம்.

அந்த வாய்ப்பின் மூலம் பல பெரிய மனிதர்களை சந்திக்கவும், பேசவும், அவர்களுடன் நெருக்கமாகப் பழகவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஒரு வார நிகழ்ச்சிக்கு இவரையும் அழைத்திருந்தோம்.

ஆனால், Blue Matte-ல் ஷூட்டிங் என்பது பற்றி முன்கூட்டியே அவரிடம் சொல்ல மறந்துவிட்டேன். 😔

அவர் நீல நிற T-shirt அணிந்து கொண்டு ஷூட்டிங்கிற்கு வந்துவிட்டார்.

அப்போது நான் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலம். டெக்னிக்கல் டீமில் இருந்தவர்கள், “நீங்களே அவரிடம் போய் சொல்லி, உங்கள் காசில் ஒரு T-shirt வாங்கிக் கொடுத்துவிடுங்கள். இல்லையென்றால் மேலிடத்திற்கு தெரிந்தால் பிரச்சினையாகிவிடும்” என்று கூறினார்கள்.

மிகுந்த தயக்கத்தோடு அவரிடம் சென்று,

“சார்… இது மாதிரி நடந்து விட்டது என்னுடைய தவறுதான். நீங்கள் T-shirt சைஸ் சொல்லுங்கள். நானே வாங்கிக் கொடுத்து விடுகிறேன்” என்றேன்.

அவர் மிகவும் இயல்பாக,

“நான் தேர்ந்தெடுப்பதுதான் எனக்குப் பிடிக்கும்” என்றார்.

“சரி சார், வாருங்கள்” என்றேன்.

அவர் காரில் செல்வார் என்று நினைத்தேன்.

ஆனால்,

“உங்களிடம் Bike இருக்கிறதா?” என்று கேட்டார்.

என்னிடம் Bike இல்லை. நண்பர் ஒருவரிடம் Bike வாங்கிக்கொண்டு, அவருடன் சேத்துப்பட்டில் இருந்த ஒரு பெரிய கடைக்குச் சென்றோம்.

எனக்குள் ஒரே பதற்றம்.

ஏனென்றால், நண்பரிடம் கடன் வாங்கி ₹1,000 மட்டுமே எடுத்துக் கொண்டு வந்திருந்தேன். 😄

அவர் கடைக்குள் சென்று T-shirts தேர்வு செய்ய ஆரம்பித்தார்.

ஒவ்வொன்றின் விலையையும் பார்க்கும்போதெல்லாம் எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

மூன்று, நான்கு T-shirts எடுத்துப் பார்த்து,

“இது நன்றாக இருக்கிறதா?” “இது ஓகேவா?”

என்று என்னிடமே கேட்டார்.

கடைசியில் இரண்டு T-shirts-ஐ தேர்வு செய்து பில் போட வந்தார்.

அப்போது நான் தயக்கத்துடன்,

“சார்… என்னிடம் இவ்வளவு ரூபாய்தான் இருக்கிறது. மீதி பணத்தை நான் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்…” என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே,

“வேறு ஏதாவது சாப்பிடுறீங்களா? Juice குடிக்கிறீங்களா? Wait பண்ணுங்க… நான் Bill pay பண்ணிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சென்றார்.

பில் பணத்தை அவரே செலுத்திவிட்டு வந்தார்.

அதோடு முடிந்துவிடவில்லை.

என்னை அழைத்துக்கொண்டு ஒரு கடைக்குச் சென்று Milkshake வாங்கிக் கொடுத்தார். Snacks வாங்கிக் கொடுத்தார். சிறிது நேரம் என்னுடன் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார்.

பிறகு மீண்டும் Shooting Spot-க்கு வந்து, ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்றார்.

அதற்கு முன்பும் சினிமா துறையில் சில இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருந்தது.

ஆனால், அந்த சூழ்நிலையில் இயல்பாகவே கோபப்படக்கூடிய ஒரு விஷயம்.

நான் செய்த தவறு.

அதிலும், அவர் விரும்பாத வகையில் ஷூட்டிங் அமைந்திருந்தது.

ஆனால் அவர் கோபப்படவில்லை.

அந்த நிகழ்ச்சிக்காக எந்த சம்பளமும் வாங்கவில்லை. தன்னுடைய சொந்த செலவிலேயே வந்து சென்றார்.

அதைவிட முக்கியமாக…

அப்போது நான் ஒரு சிறிய ஊழியன். கையில் பணமில்லை. தவறு செய்துவிட்டேன் என்ற பயத்தில் இருந்தேன்.

அந்த நிலையில் அவர் என்னை நடத்திய விதம்…

அந்த அன்பையும் மனிதநேயத்தையும் என்னால் என்றுமே மறக்க முடியாது. ❤️

இன்று பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

ஆனால் சில நினைவுகள் மட்டும் காலம் கடந்தாலும் மனதில் அப்படியே இருக்கும்.

அந்த T-shirt ஒரு உடை மட்டுமல்ல… எனக்கு அது ஒரு மனிதரின் அன்பையும், பெருந்தன்மையையும் நினைவூட்டும் ஒரு அழகான நினைவு. ❤️

சில மனிதர்கள் நம்முடைய வாழ்க்கையில் வந்து போவார்கள்.

ஆனால் அவர்கள் நம்மிடம் காட்டிய மனிதநேயம் மட்டும் வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கும். ❤️