MVR Infotainer

அடூர் கோபாலகிருஷ்ணன்

வணக்கம் நண்பர்களே,

அடூர் கோபாலகிருஷ்ணன்

நேற்று ஒரு வேலை நிமித்தமாக திருவனந்தபுரம் செல்ல நேர்ந்தது. பலருக்கும் இந்த ஊர் பள்ளிக்கால முதல் சுற்றுலா ஊராக இருந்திருக்கும் சிலருக்கு குடும்ப நண்பர்கள் உறவினர்களுக்காக செல்லும் ஒரு ஊராக இருந்திருக்கும் எப்பொழுதும் நம் அருகில் இருக்கும் ஒரு ஊர் என்று மகிழ்ச்சியானதாகவே இருந்திருக்கும்.

50க்கும் மேற்பட்ட தடவை இந்த ஊருக்கு சென்று இருப்பேன் ஆனால் முதன் முதலில் இந்த ஊருக்கு சென்றது எனக்கு ஒரு சோகமான அனுபவம் தான் 2002ல் பத்தாம் வகுப்பு தொடங்கும் போது அப்பாவை திருவனந்தபுரம் சித்திரை திருநாள் மருத்துவமனை மற்றும் அங்குள்ள ரீஜனல் கேன்சர் சென்டரில் ஆறு மாதங்கள் சிகிச்சைக்காக சேர்த்திருந்த போது சில மாதங்கள் அங்கேயே தங்கியிருந்தேன் பலமுறை சென்று வந்த அனுபவம் தான் அந்த ஊருக்கு எத்தனை தடவை போனாலும் எனக்கு மனதில் படிந்திருக்கிறது.

அந்த ஊரில் பல மகிழ்ச்சியான அனுபவங்கள் நிறைய முறை நடந்திருந்தாலும் முதன் முதலில் சில பலமுறை போன அந்த சோகமான நினைவுகளே அதிகம் உள்ளது மனதுக்கு நெருக்கமான ஒரு ஊர். இந்த முறை அலுவல் நிமித்தமாக ஒரு மீட்டிங்காக சென்ற போது வெளிநாட்டில் இருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களை சந்திக்க வேண்டும் என்று சொன்னதால் என் மலையாளி நண்பர் ஒருவரிடம் சொல்லி பேசி அவரிடம் மாலை 5 மணிக்கு அப்பாயின்மென்ட் வாங்கி இருந்தோம்.

நேரம் தவறி விடக்கூடாது என்பதற்காக மூன்று மணிக்கே அவர் இருக்கும் இடத்தை அவரிடம் கேட்காமல் கூகுளில் தேடிப் பார்த்து சென்று சேர்ந்து விட்டோம் பிறகு தான் தெரிந்தது அந்த இடத்தில் இருந்து அவர் மாறிவிட்டார் என்று அப்பொழுது மீண்டும் மலையாள நண்பரை அழைத்து பேச அவர் சொன்னார் அங்கு யாரிடம் கேட்டாலும் தெரியும் என்று முதலில் நம்பவில்லை பின்னர் ஒரு ஆட்டோ டிரைவரிடம் கேட்க நேரடியாக அவர் வீட்டு வாசலில் கொண்டு போய் நிறுத்தினார்.

அந்த வீடு மிக அருமையாக சுற்றிலும் தோட்டம் கிணறு திண்ணை முத்தம் வானம் என்று பஞ்ச பூதங்கள் வந்து செல்லும் பாரம்பரியமிக்க வீடாக இருந்தது அதில் ஒரு கண்ணாடி சுவர் வழியாக அவர் மட்டும் உள்ளிருந்து ஒரு ஓரத்தில் ஒரு சிறிய விளக்கொலியில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் மற்ற இடம் அனைத்தும் பகலில் வீட்டிற்குள் வரும் சிறிய வெளிச்சத்திலேயே இருந்தது.

வீட்டில் காலிங் பெல் கிடையாது ஒரு மணி கோவில் மணி கட்டி வைத்திருந்தார் அதை அடித்ததும் மெதுவாக நடந்து வந்து திறந்தார் எதற்காக என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள் என்று சொல்லவும் நண்பர் வெளிநாட்டில் நடத்தி வரும் திரைப்பட கல்லூரி மற்றும் நூலகம் தொடர்பாக அவரிடம் பேசி அறிமுகப்படுத்தி நான் வாங்கி வந்த இருட்டுக்கடை அல்வாவை கொடுத்து அவரிடம் இரண்டரை மணி நேரம் மேல் பேசிக்கொண்டிருந்தோம்.

முதலில் நாங்கள் தமிழில் பேச அவரும் சிறிது தமிழில் பேசினார் சிறிய வயதில் திண்டுக்கல் காந்திகிராமத்தில் படித்த போது தமிழ் எழுத படிக்க தெரியும் ஆனந்த விகடன் வாங்கி விட்டீர்களா என்று விளம்பரத்தை பார்த்து அடிக்கடி வாங்கி படிப்பேன் என்றார் பின்னர் படிக்க மறந்து போய்விட்டது என்று சொன்னார். பிறகு இரண்டரை மணி நேரம் ஆங்கிலத்திலேயே பேச்சு தொடர்ந்தது.

32-வது வயதில் இயக்கிய ‘சுயம்வரம்’ (1972) படத்தின் மூலம் புதிய யதார்த்த அலையை மலையாள சினிமாவில் தொடங்கி வைத்தார். முதல் படம் தொடங்கி, கடந்த 2016-ல் வெளியான அவருடைய ‘ஒன்ஸ் எகைன்’ (2016) வரை, கடந்த 49 ஆண்டுகளில் அவர் 12 படங்களைப் படைத்திருக்கிறார். இதுவரை 22 ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார். இது தவிர புத்தகங்களும் எழுதி இருக்கிறார் அவருடைய இயக்கம் புத்தகம் எல்லாவற்றிற்கும் தேசிய விருது பத்மஸ்ரீ பத்ம விபூஷன் தாதா சாகிப் பால்கே என்று அத்தனை விருதுகளை வாங்கி இருக்கிறார் ஆனால் அதன் எந்த சுவடும் அவரிடம் தெரியவில்லை.

இங்கு சில வளர்ந்து வரும் இயக்குனர்களிடமே அவ்வளவு செருக்கு பார்த்து உள்ளேன் ஆனால் இவ்வளவு சாதித்த பின்னரும் மிகவும் எளிமையாக அடக்கமாக நான் கேட்கும் சாதாரண கேள்விகளுக்கு கூட விரிவான பதில்களை கொடுத்து கொண்டு இருந்தார். அவர் இயக்கிய 12 படங்களில் நான் மூன்று படங்களை மட்டுமே பார்த்துள்ளேன். எரிபத்தயம், மதிலுகள், நிழல் கூத்து, இதில் மதிலுகள் மற்றும் நிழல் கூத்து என இரு படங்களுமே மனதிற்கு நெருக்கமானவை ஒன்று காதலின் சோகத்தை கூறியது இன்னொன்று வாழ்வின் இயலாமையை கூறியது.

இதில் மதிலுகள் படம் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து எடுத்து அவரிடம் அனுமதி பெற்று அவர் விரும்பி இயக்கச் சொன்ன படம் என்பதை பின்னர் படித்து தெரிந்து கொண்டபோது ஒரு படைப்பாளி எப்படி இன்னொரு படைப்பாளியை உணர்ந்து தன்னுடைய படைப்புக்கு உரிமை கொடுக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

அவருடைய முதல் படம் சுயம்வரம் எடுத்து பல்வேறு ஆளுமைகளுக்கு திரையிட்டு காட்டிய போது பலரும் பார்த்து விட்டு பெரிய வார்த்தைகளை சொல்லவில்லை ஆனால் பாலு மகேந்திரா அப்பொழுது படம் எடுக்கவில்லை ஒளிப்பதிவாளராகவும் ஆகவில்லை ஓடி வந்து இவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பிலிம் இன்ஸ் டியூட் ஸ்டுடென்டஸாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தி விட்டீர்கள் என்று கூறியது இப்பொழுதும் நினைவில் இருப்பதாய் சொன்னார்.

இன்று பல ஃபிலிம் இன்ஸ்டிடியூட்கள் இருக்கிறது ஊடக பாடம் கற்றுக் கொடுக்கும் பல இடங்கள் உள்ளது. அவற்றில் நீங்கள் கற்றுக் கொடுக்கும் மற்ற விஷயங்களை விட மாணவர்களுக்கு அதிகம் வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் எழுத கற்றுக் கொடுக்க வேண்டும் திரைப்படங்களை பார்க்க கற்றுக் கொடுக்க வேண்டும் வாசிப்பதின் மூலமும் வாசித்ததினால் கிடைக்கும் அனுபவத்தின் மூலம் எழுதுவதின் மூலமும் திரைப்படங்களைப் பார்ப்பதன் மூலம் அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை வைத்து உரையாடுவதன் மூலமும் மட்டுமே ஒரு கலைஞன் உருவாக முடியும் என்பதை ஆழமாக நம்புவதாக கூறினார்.

இதற்காக மலையாளம் ஸ்கூல் என்ற பெயரில் திருவனந்தபுரத்தில் இவருடைய நண்பர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமைகளில் அரை நாள் மட்டும் 100 மாணவர்களை வைத்து மலையாள இலக்கியம் கற்றுக் கொடுக்கும் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி விடுவதைப் பற்றி கூறினார் மிகவும் இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தது விரைவில் அப்படி ஒரு பள்ளியை திருநெல்வேலியில் தொடங்க ஆர்வமாய் உள்ளேன்.

அவருடைய ஒரே மகள் ஐபிஎஸ் அதிகாரியாக இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இன்னொரு ஐபிஎஸ் அதிகாரியை காதலித்த திருமணம் செய்து கொண்டு மகாராஷ்டிராவில் இப்பொழுது ஏடிஜிபியாக இருப்பதாகவும் ஒரே ஒரு பேரன் என்றும் அவருக்கு மலையாளம் தெரியாது ஆனால் ஆங்கிலத்தில் நன்றாக சிறுகதைகள் எழுதுகிறார் என்றும் பெருமைப்பட்ட அவர் சொன்ன போது மூன்றாம் தலைமுறை மீண்டும் கலைத்துறைக்குள் வருவதற்கு வாழ்த்துகள் சொன்னது அவருக்கும் முகத்தில் மலர்ச்சியை கொண்டு வந்தது.

இந்தியாவில் மும்பை மற்றும் கல்கத்தாவில் உள்ள பிலிம் இன்ஸ்டியூட் இரண்டையும் இணைத்து மத்திய அரசாங்கம் டீம்ட் யூனிவர்சிட்டி ஒன்றை உருவாக்க இருப்பதை பற்றி சொன்னவர். இனிமேல் நேரடியாக அங்கே முனைவர் பட்டம் ஆய்வு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை குறித்தும் சொன்னார்கள். பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் இயங்குவதில் இருக்கக்கூடிய சிக்கல்களைப் பற்றி விவாதித்தார்கள்.

இலங்கை சீனா பாகிஸ்தான் இந்தியா அமெரிக்கா ரஷ்யா உலக அரசியலைப் பற்றி அவ்வளவு ஆழமான வேறு விதமான புரிதல்களை பகிர்ந்து கொண்டார்கள். இன்று இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே உருவாகி இருக்கக்கூடிய ஒரு நெருக்கடி நிலைக்கு மற்ற அனைத்து நாடுகளும் எந்த அளவில் காரணமாக இருக்கின்றன. இந்த உலக அரசியலின் சதி பின்னல் வலை பற்றி அவர்கள் கூறிய போது இந்த 83 வயதிலும் அவர் எப்படி இவ்வளவு விஷயங்களை தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது வியப்பாக இருந்தது.

நான் இருட்டுக்கடை அல்வாவை கொடுத்த போது அதைத்தான் ஏற்கனவே சுவைத்திருப்பதாகவும் இது எத்தனை நாளுக்கு இருக்கும் என்று கேட்டு தெரிந்து கொண்டார். அது 20 நாட்களுக்கு மேலாக இருக்கும் என்று சொன்னதில் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். அதை தன்னுடைய பேரனுக்கு அனுப்பி வைப்பார் என்று நினைக்கிறேன்.

விரைவில் நண்பருடைய ஃபிலிம் இன்ஸ்டியூட் ஆக மாணவர்களிடம் ஒரு உரையாடல் நிகழ்த்த ஒப்புக் கொண்டுள்ளார் நீங்கள் எடுக்க திட்டமிட்டு எடுக்க முடியாமல் போன ஸ்கிரிப்ட் ஏதாவது இருந்தால் கொடுங்கள் நாங்கள் செய்கிறோம் என்று கேட்டேன். அப்படி ஒன்றும் இல்லை ஆனால் மாணவர்கள் பார்க்க வேண்டிய படங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் படிக்க வேண்டிய கட்டுரைகள் பார்க்க வேண்டிய ஆவணப் படங்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது உங்கள் மெயில் ஐடி அனுப்புங்கள் அதை அனுப்புகிறேன் என்றார்.

தமிழ் திரைப்படங்களைப் பற்றி அவருடைய பார்வை தற்கால மலையாள திரைப்படங்களை பற்றி அவருடைய பார்வை அவருடைய காலகட்ட மலையாள சினிமாவின் வளர்ச்சி மலையாள இலக்கியங்கள் பற்றிய பார்வை தமிழ் இலக்கியங்கள் பற்றிய புரிதல் உலக இலக்கியங்கள் என்று உலக சினிமாக்களின் வழியாக அவர் பல விஷயங்களை பேசியது 100 புத்தகங்களை படித்ததற்கு சமமாக இருந்தது.

உண்மையில் அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பி வந்தோம் அந்த வீடும் அங்கிருந்த அழகும் அமைதியும் இயற்கையும் அவரின் அன்பான கனிவான உரையாடலும் மனதை நெகிழ்ச்சி அடைய செய்தது கடந்த 25 நாட்களாக இந்த கை வலியோடு தான் பல்வேறு இடங்களுக்கு சுற்றி வருகிறேன் ஆனால் நேற்று அவரோடு இருந்த அந்த இரண்டரை மணி நேரத்தில் அந்த வலி மறைந்து போயிருந்தது இன்றைக்கு 50% குறைந்து போயிருக்கிறது.

மனம் மகிழ்ந்திருக்கும் போது உடல் வலி காணாமல் போய்விடும் என்பது உண்மைதான் போல. உண்மையில் நாம் எல்லோரும் இது போன்ற பல நல்ல ஆளுமைகளை சந்தித்து பேசி பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் உங்கள் ஊரிலும் இருப்பார்கள் அவர்கள் திரைப்படத்துறை இலக்கியத்துறை சார்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஏதாவது ஒரு துறையில் அவர்கள் அனுபவத்தை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

அவர்கள் சாதித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நீண்ட நாட்கள் அந்த துறையில் நிலைத்திருந்த நபராக இருந்தால் கூட போதும் நீங்கள் கற்றுக் கொள்ள உங்களை அப்டேட் செய்து கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கும் அவற்றை தவற விட்டு விடாதீர்கள்.

அன்புடன்
M.V.R Infotainer