ஹபிபி படம் பார்த்துவிட்டு இந்த படத்தின் இயக்குனர் மீரா கதிரவன் அவர்களுக்கு நான் அனுப்பிய மெசேஜ்…
நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நான் வாழ்ந்து பார்க்கவில்லை என்றாலும் நண்பர்கள் மூலம் கேட்டறிந்த விஷயங்களை இன்னும் ஆழமாக உண்மைக்கு நெருக்கமாக இந்த திரைப்படத்தின் மூலம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
எனக்கு நினைவு தெரிந்த மூன்று நான்கு வயதுகளிலிருந்து நெருங்கிய நண்பனான முகமது பைசல் தற்போது வரை சவுதி அரேபியாவில் தான் உள்ளான். குடும்பத்தில் அவன் அப்பா சித்தப்பாவிற்கு பிறகு மூன்றாவது தலைமுறையாக அவன் தம்பி எல்லோரும் அங்கே தான் இருக்கிறார்கள். இந்த நவீன காலத்திலும் கூட மூன்று வருடத்திற்கு ஒருமுறைதான் அவன் ஊருக்கு வந்து செல்கிறான்.
அவர்கள் குடும்பத்தை கவனித்துப் பார்த்ததில் இதன் பல பகுதிகளை உணர்ந்திருக்கிறேன். எனது வீட்டிற்கு அருகில் உள்ள வீடு, 15,16 வயது வரை அவர்கள் வீட்டிலேயே தான் இருப்பேன். அதனால் அவர்களின் கலாச்சாரங்களை தெரிந்து கொஞ்சம் புரிந்து கொண்டுள்ளேன். ஆனாலும் இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள முடிந்தது.
கதை நடக்கும் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் நீங்கள் வாழ்ந்தவர் என்பதால் கதை களத்திலும் அதன் மொழியிலும் மிக அழகாக எந்தவித பூச்சுகளும் இல்லாமல், வணிக சினிமாவுக்காக உங்கள் திரை மொழியில் சமரசம் இல்லாமல் மிகச் சிறப்பாக எங்களுக்கு ஒரு அருமையான படைப்பை கொடுத்துள்ளீர்கள்..
நிச்சயம் 100 ஆண்டு கடந்த தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரும் பதிவாக இருக்கும் எனக்கு ஒரு சில காட்சிகள் தவிர ஈரானிய படம் பார்த்த அனுபவமே இருந்தது.
ஒரு குரலை கேட்க கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் காத்திருந்த வலி எல்லாம் இன்றைய genz தலைமுறைக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது.
மரணத்திற்குப் பிறகும் கூட தங்கள் வீட்டில் இருந்த நபரின் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்பதும் கடன்களுக்காக சபையில் பொறுப்பு ஏற்பதும், இப்படி ஒரு வழக்கத்தை இஸ்லாமியர்கள் பின்பற்றி வருகிறார்கள் என்பதை இந்த படம் மூலம் தான் நான் அறிந்து கொண்டேன்.
இசுலாமியர்கள் என்றாலே எதிர்மறையாகவே காட்டி பழக்கப்பட்ட தமிழ் திரை உலகத்திற்கு இது ஒரு புதிய முகம் இதுபோன்ற உண்மைக்கு நெருக்கமான படங்கள் இன்னும் அதிகம் வர வேண்டும்….
என்னதான் வெளிநாடுகளில் சுற்றி இருந்தாலும் ஊர்க்கிணற்றில் குளிக்கும் சந்தோஷம், சிறிய சோப்பு மிகப்பெரிய காதல் கதையை எழுதும் விஷயம், திருமணங்கள் ஒரு ஆணுக்கு பண நிலைமை வைத்து மட்டுமல்ல பல்வேறு விஷயங்களை வைத்து முடிவு செய்கிறது, என்பது போன்ற பல விஷயங்களை இந்த படம் உரையாடல்களாக நமக்குள் செலுத்திக்கொண்டே இருக்கிறது. தறி வரலாறும் ஊடே சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு திருமணம் எத்தனை குடும்பங்களின் சூழலை பாதிக்கிறது. ஒரு வருடம் நான்கு வருடம் ஒருமுறை ஊருக்கு வந்து இருக்கும் இரண்டு மாதத்தில் எவ்வளவு விஷயங்களை அவர்கள் செய்து முடிக்க வேண்டி இருக்கிறது. மரணத்திற்கு கூட ஊருக்கு வர முடியாத சூழல்.
இஸ்லாமிய கல்வி நிலையங்கள் எப்படி இருந்தது அன்று இன்று எப்படி மாறி இருக்கிறது பல விஷயங்கள் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் போய் சம்பாதித்தாலும் அதில் இருக்கக்கூடிய கஷ்டம் பணம் வந்தாலும் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அதில் செய்யக்கூடிய முதலீடு அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் 20 வருடம் வெளிநாடு இருந்து வந்தாலும் இங்கு வந்து கஷ்டப்படக்கூடிய நிலைமை என்று அனுபவக் கதைகளாக பலரின் வரலாற்று கதைகளை ஒரு கதாபாத்திரம் வழியாக கொடுத்திருக்கிறார்..
விமர்சனமாக இல்லாமல் இஸ்லாமிய பெண்களின் நிலை இன்றும் மாறாமல் இருப்பதை மிக அழகாக சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால் அந்த பெண்கள் அதிலிருந்து எப்படி மீண்டு தங்களை சுயமரியாதை உடையவர்களாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அழகாக சுட்டி காட்டி எல்லோரும் மாற வேண்டும் என்பது போன்று சொல்லாமல் சொன்ன விஷயங்களும் அருமை.
ஒரு குடும்பத்தின் வழியாக ஓராயிரம் குடும்பங்களின் கதை. காதலின் வழியாக ஓராயிரம் காதலின் வலி. சொல்ல முடியாத சொல்லாமல் போன லட்சக்கணக்கான தமிழ் இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அவர்களின் வட்டார மொழியை அவர்களின் பழக்க வழக்கத்தை நேர்த்தியாக பதிவு செய்த உங்களுக்கு எவ்வளவு பெரிய பாராட்டுக்களை கொடுத்தாலும் அது போதாது..
அதிக வருட இடைவெளியில் ஒரு படம் என்று இல்லாமல் இனிமேலாவது இதுபோன்ற நிறைய படங்களை நீங்கள் எடுக்க வேண்டும்.
கடைசி பத்து நிமிடம் கேரளாவின் அழகை காட்டுவதோடு தனிமை பிரிவின் துயரை நிலங்களின் வழியாக காட்சி அமைத்திருப்பார் இறுதியில் யாருமே எதிர்பாராமல் நிலாவை சந்திக்கும் அபு அவரிடம் பேசும் உரையாடல் கிளைமாக்ஸ் யாருமே எதிர்பாராமல் குலா சொல்லும் நிலாவின் குரலில்.
தலாக் என்பது ஆண்கள் சொல்லும் விவாகரத்து குலா என்பது பெண்கள் சொல்லும் விவாகரத்து என்று விளக்கத்தோடு.முடிகிறது. மனம் வருந்திய பபர்வீன் அபு மனதை புரிந்து கொண்டு மீண்டும் வந்தாரா? பிரிந்திருக்கும் நிலா அபு இடையே ஏதேனும் உறவு மலர்ந்ததா? அல்லது மூன்று பேரின் வாழ்க்கையும் தனித்தனியாக தொடர்கிறதா? என்று பல கேள்விகளோடு ஆடியன்ஸின் பார்வைக்கே படத்தை முடித்து விட்டார் நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு பில் குட் படம்.
அபு, நிலோ, பர்வீன், சாச்சி, பர்வீன் அப்பா, அபு அப்பா, அவரின் இந்து நண்பர் என படத்தில் ஒரு சில நொடிகள் வந்த கதாபாத்திரங்கள் கூட எல்லோரும் எங்கள் மனதில் இருந்து நீண்டகாலம் அகலாமல் நிலைபெற்று இருக்கப் போகிறார்கள்…
மகிழ்ச்சி….
அன்புடன்
மு.வெங்கட்ராமன்
பாளையங்கோட்டையிலிருந்து