MVR Infotainer

அந்தம்மா

அந்தம்மா

“அந்தம்மா”

இது ஒரு சாதாரண வார்த்தை அல்ல. 75 வருடங்கள் வாழ்ந்து, இன்று 21.08.2026 மதியம் காலமாகிவிட்ட என் வாழ்க்கையில் முக்கியமான நபர்களில் ஒருவரின் பெயர். அதுவும் நான் வைத்த பெயர். ஆம், எத்தனை பேருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. ஆனால், எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆம், அவருடைய வயதில் பாதி வயது கூட இல்லாத நாள். அவருக்கு பெயர் வைத்த கதை என்ன என்று சொல்ல 55 வருடங்களுக்கு முன்பு பின்னோக்கி செல்ல வேண்டும். இந்தப் பெயரே பெரும்பாலும் அவர் வசித்த பகுதியில் நீண்டநாள் நிலைத்திருந்தது. இன்று அவருடைய மரணச் செய்தியைத் தெரிந்து கொள்ளும்போதுகூட அந்தப் பெயர் வழியாகவே அறிந்து கொண்டேன்.

கடந்த சில மணி நேரங்களாக என் வாழ்வின் 30 ஆண்டுகளுக்கு முன்னும் பின்னும் பல்வேறு நினைவுகளுக்குள் nonlinear படம் போல் காலப்பயணம் செய்து, மாறி மாறி அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் வசனங்களாக என் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்று நான் அடைந்திருக்கும் பக்குவத்திற்கும், பலருக்கும் நான் வழிகாட்டக்கூடிய அளவில் உயர்ந்திருப்பதற்கும் காரணம் என் சிறு வயதில் கிடைத்த அனுபவங்கள்தான். அத்தனை பேரும் வயதில் மூத்த பெண்கள். அக்கா, அம்மா, சித்தி, பெரியம்மா, அத்தை என்று உறவுகள் அல்லாத, அண்டை வீட்டின் மூலமாகப் பழகிய உறவுகளாக நிறைய பேர் இருந்துள்ளார்கள். அவர்களில் முதன்மையானவர் அந்தம்மா.

ஒரு மனிதர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வைத் தருகிறார். எல்லோருக்கும் ஒருவர் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதேபோல், ஒருவர் எல்லோருக்கும் எல்லா காலகட்டத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருவர் பிறந்ததிலிருந்து மறையும் வரை எல்லோருக்கும் பிடித்தவராக இருப்பதில்லை. ஆனால், சிலர் காலம் முழுவதும் எல்லோராலும் விரும்பப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். தேவைக்காகவோ, அன்பினாலோ, ஏதோ ஒரு காரணத்தினாலோ… இப்படி ஒருவர்தான் இந்த அந்தம்மா.

அவருடைய மகள் சென்னையில் திருமணமாகி வசித்து வருகிறார். மகன் குடும்பம் மதுரை மேலூரில் உள்ளது. ஆனால், அவர் பெரும்பாலான நேரங்களில் அம்மாவுடன் தான் இருந்திருக்கிறார், இந்தக் கடைசி காலகட்டத்தில் அவர் வீட்டிற்கு அழைத்தும் கூட, “என் உயிர் நான் வாழ்ந்த வீட்டில்தான் போக வேண்டும்” என்று உறுதியாக இருந்து, அந்த வீட்டிலேயே உயிரிழந்துள்ளார் அந்தம்மா.

அந்தம்மா வாழ்ந்து மறைந்த அந்தத் தெருவின் பெயர் சுடலை கோவில் தெரு. என் மூதாதையர்கள் கட்டிய கோவில் எங்கள் குடும்ப கோவில் அது. கோவிலின் பெயராலே அந்த தெரு அழைக்கப்படுகிறது. என் குடும்பத்திற்கும் 200 வருட பந்தம் அந்த கோவில் தெரு. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வடக்குப் பகுதியில் உள்ள இந்தத் தெருவில் நான்காம் நம்பர் வீடு, லட்சம் கதைகள் சொல்லும் இரண்டு திண்ணைகள் கொண்ட நூற்றாண்டுகள் கடந்த பழமையான ஓட்டு வீடு. இன்னும் அந்தத் திண்ணையின் மாலை நேர சூடு என் உடம்பில் உணர முடிகிறது. உள்ளே ஒரு பெரிய காம்பவுண்ட். நவீன வீடுகள் 5, 6 வீடுகள் உண்டு. என்னுடைய ஒரு வயதில் இருந்து 1989 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு அக்டோபர் வரை, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அந்தத் தெருவில்தான் வசித்தேன்.

4, 4A, 4C, அந்தக் காம்பவுண்டுக்குள்ளேயே பல வீடுகள் மாறி இருப்போம். இடையில் இரண்டு வருடங்கள் மட்டும் கொஞ்சம் தள்ளி உங்கள் வசித்த வீடு அந்தப் பகுதியை அவர் வேறு ஒருவருக்கு விற்றதால் வெளியே இருந்தோம். மீண்டும் அதே வீட்டிற்கு வந்தோம் பின் அப்பா உடல்நிலை காரணமாக சில மாதங்கள் வெளியில் இருந்தோம். பின் மீண்டும் அதே தெருவுக்குள் அதே வீட்டுக்குள் வந்துவிட்டோம். அம்மாவின் சிறுவயதும் அந்தத் தெருவில்தான். அப்பா இறந்ததும் அந்த தெருவில்தான். என்னுடைய சிறுவயதும் அந்தத் தெருவில்தான். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நாட்களும் அங்கேதான். மிகக் குறுகிய காலம் சொல்லொண்ணா துயரங்களைத் தாண்டி வந்ததும் அந்தத் தெருவில்தான்.

ஆயிரம் சுவாரசிய மனிதர்களின் தொகுப்பு அந்த தெரு, 4, சுடலை கோவில் தெரு என்று அந்தத் தெருவின் பெயரில் ஒரு நாவல் எழுதும் அளவுக்கு நினைவுகளைச் சேர்த்து வைத்துள்ளேன். ஏதாவது ஒரு நாள் எழுதி முடித்துவிட வேண்டும் என்று எழுதத் தொடங்கி, பலமுறை அதை அப்படியே சேமித்து வைத்துவிட்டேன். அவ்வளவையும் எழுதி முடிக்கும் அளவுக்கு மனதில் தெம்பு இல்லை என்பதை உண்மை.

அந்த தெருவின் வரலாற்றில் முக்கிய நாயகி அந்தம்மா. அங்கு வாழ்ந்த பலரும் அங்கிருந்து புலம்பெயர்ந்து சென்று விட்டாலும், 50 வருடங்கள் மேலாக அங்கேயே வாழ்ந்தவர் அந்தம்மா அந்தப் பகுதியில் பலருக்கும் தெரிந்தவர். அவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள மூலைக்கரைப்பட்டி. அங்கிருந்து திருமணமாகி, 20 வயதில் அந்தக் காலகட்டத்தில் பாளையங்கோட்டை வடக்குப் பகுதிக்கு வந்தார். 1970-களின் பிற்பகுதியில், அப்போது என்னுடைய அம்மா 15 வயது இருக்கும்போது இருந்து எங்கள் குடும்பத்தோடு நெருங்கியவர் ஆகிவிட்டார்.

அவருடைய மகன், மகளுக்கு டியூஷன் எடுப்பது, தையல் தைத்துக் கொடுப்பது என்று இருந்தார். செகண்ட் ஹேண்டில் அவர் வாங்கிக் கொடுத்த ஒரு தையல் மிஷினை வைத்து அம்மா தையல் தைத்து வந்த கடனை அடைத்தார் என்று சொல்வார். இன்னும் அந்த மிஷின் எங்கள் வீட்டில் இருக்கிறது. 50 ஆண்டுகளைக் கடந்து, அம்மா வளர்ந்து, திருமணம் ஆகி, நான் பிறந்ததும் தலையில் என்னை எழுப்பி, குளிப்பாட்டி, அலங்கரித்து, உணவு டப்பாவோடு அந்தம்மா வீட்டில் விட்டுவிடுவார்.

அந்தம்மாவின் இயற்பெயர் லீலாவதி. சிறுவயதில் அந்தப் பெயரைச் சொல்லி பலரும் அழைத்தார்கள். அவருடைய மகளின் பெயர் விஜி. அதனால் திருமணத்திற்குப் பிறகு பெண் குழந்தை பிறந்த பிறகு விஜியம்மா என்று அருகில் இருப்பவர்கள் அழைத்து வந்தார்கள். நான் பிறக்கும் வரைதான் அந்தப் பெயர். என்னைக் கொண்டு என் அம்மா அவர்கள் வீட்டில் விடும்போது, அங்கு நான் இருப்பேன். பேசத் தொடங்கிய காலகட்டத்தில் அவர்கள்தான் என்னைப் பெரும்பாலான நேரங்களில் வளர்த்தார்கள். அவர்கள் பிள்ளைபோல் வளர்த்தார்கள். கலகலப்பாகப் பேசக்கூடிய ஒரு நபர்.

தினமும் காலையில் என்னை குளிப்பாட்டி காலை உணவு கொடுத்து அவர்கள் வீட்டில் கொண்டு விட்டு விடுவார் அம்மா அங்கேயே தான் இருப்பேன் நாள் முழுவதும் இரவில் தூங்கும் நேரத்தில் இது வளர்ந்த பின்பும் தொடர்ந்தது. அவர்கள் வீட்டிலேயே நான் பெரும்பாலான நேரம் இருப்பதால், அவர்களோடு எல்லா இடங்களுக்கும் செல்வதால், சிறு பிள்ளையாக இருக்கும்போது என்னைப் பார்ப்பவர்கள் “அது யார்?” என்று கேட்கும்போது, என் அம்மாவைப் பார்த்து, “இது என் அம்மா, அது அந்த அம்மா” என்று நான் மழலை மொழியில் சொல்லியுள்ளேன். பின்னால் நான் “அந்த அம்மா, அந்த அம்மா” என்று சொல்லி, அதுவே அவருடைய பெயராக நிலைத்துவிட்டது.

அந்தத் தெருவில் பலருக்கும் அவரை அந்தம்மாவாகத்தான் தெரியும். நான் உட்பட என் உறவினர்கள், நண்பர்கள், அந்தக் காம்பவுண்டில் வசிப்பவர்கள், சில நேரங்களில் அவர்களின் உறவினர்கள்கூட அந்தப் பெயரைச் சொல்லித்தான் அழைப்பார்கள். பலருக்கும் அவருடைய உண்மையான பெயர் என்னவென்றே தெரியாது.

தவழ்ந்து கொண்டிருந்த வயதில் அவரோடு தொடங்கிய உறவு, இன்னொரு தாயாக எனக்கு இருந்தார். எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்து என்னுடைய முதல் வெளிமாவட்டப் பயணம் மட்டுமல்ல, அதிக மாவட்டங்களுக்கும் அவரோடுதான் பயணம் செய்து உள்ளேன். அதிக திரைப்படங்களுக்கு சிறிய வயதில் அவரோடுதான் சென்று உள்ளேன். அவருடைய கணவர் வெளி மாநிலங்களில் ஹோட்டல்களில் வேலை பார்த்ததால், சின்ன வயதில் இருந்து அவர்கள் தனியாகவே எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். செல்லும் இடங்கள் எல்லாம் என்னையும் அழைத்துச் செல்வார்கள். அவருடைய உறவினர்கள் பலருக்கும் என்னைத் தெரியும். அவர்கள் தெலுங்கு மொழி பேசுவதால், அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை நானும், என்னுடைய பெரியம்மா போன்ற பலரையும் தெலுங்கு மொழியிலேயே அழைப்பேன். அவர்கள் வீட்டில் உள்ளவர்களையும் அவர்கள் அழைக்கும் மொழியிலேயே உறவாக அழைத்து வந்தேன்.

நான் முதன்முதலில் கோவில் கொடை பார்த்தது அவரோடுதான். மூலைக்கரைப்பட்டி ஓடக் கரையான் கோவில், சுடலை கோவில் கொடை விழா, ராமர் கோயில் கொடை விழா, அவர்கள் உறவினர் வீட்டு திருமணங்கள், ஒரே மேடையில் நான்கு, ஐந்து, எட்டு என்றெல்லாம் நடக்கும் தடபுடலான விருந்து இருக்கும். ரிட்டன் கிப்ட் எல்லாம் அப்பொழுது விலை உயர்ந்ததாகத் தருவார்கள். ஒவ்வொருத்தர் திருமணத்திற்குப் போகும்போதும் ஒரு அனுபவம்.

சிறுவயதில் அவர்கள் வீட்டில்தான் எங்கள் தெருவில் உள்ள அத்தனை பையன்களும் ஒன்றாகச் சேர்ந்து டிவி பார்ப்போம். எங்கள் காம்பவுண்டிலேயே அவர் வீட்டில் மட்டும்தான் டிவி உண்டு. நான் மட்டும் இரவு பத்தரை, 11 மணி வரைக்கும் எல்லாம் இருந்து ஜென்மம், எக்ஸ், அலிஃப், லைலா இன்னும் பல DD National டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்துதான் எங்கள் வீட்டில் டிவி வாங்கினோம்.

அவர்கள் வீட்டில் பூரி சமைத்தால், பொங்கல் வைத்தால், சப்பாத்தி போட்டால், இட்லியைத் தவிர வேறு ஏதாவது உணவு செய்தாலே எனக்கும் எடுத்து வைத்துவிடுவார். தீபாவளி பொங்கல் வரலட்சுமி நோன்பு ஒவ்வொரு சிறிய சிறிய நிகழ்வுகள் கூட செய்யும் அத்தனையிலும் எனக்கும் ஒரு பங்கு உண்டு. நான் இல்லாவிட்டாலும் எடுத்து வைத்து விடுவார் வந்ததும் எனக்கு தருவார். என் 7 வயதில் அவர்கள் மகள் திருமணத்திற்கு எனக்கு ஒரே மாதிரியான உடை எடுத்து, திருச்சிக்கு அழைத்துச் சென்றார்கள். என் வீட்டில்கூட யாரும் வரவில்லை. நான்தான் அவர்களோடு சென்றேன். பல இடங்களுக்கு என் அம்மா, அப்பாவோடு பார்க்காத பல இடங்களுக்கு அந்தம்மாவோடுதான் சென்று உள்ளேன்.

பல கோவில்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். பல திரைப்படங்களுக்கு சென்றுள்ளோம். பல திருவிழாக்களுக்கு சென்றுள்ளோம். பல திருமணங்களுக்கு சென்றுள்ளோம். என்னுடைய பால்ய வயது முழுவதுமே அவர்களோடு, அவர்கள் வழிகாட்டுதலில் நிறைய நினைவுகள் உள்ளன. அவர்கள் வீட்டில் முருங்கைக்காய் பறித்து, அதை தெருவில் விற்று வந்துள்ளேன். அவர்கள் பூஜை செய்யும்போது கொடுக்கும் கல்கண்டுக்காக ஒரு மணி நேரம்கூட பூஜை அறையில் காத்திருந்துள்ளேன்.

எங்களுக்காக நிறைய செய்துள்ளார். எங்கள் வீட்டில் வேலை பார்த்த பெண்மணிக்காக ஒரு தனிச் சிறு வீடு கட்டிக் கொடுத்தார். வாடகைக்குத்தான் ஆனாலும், அப்படி செய்ய யாருக்கும் மனது வராது. அம்மா திருமணத்திற்கு முன் பல உதவிகளை அவரிடம் இருந்து பெற்றுள்ளார். திருமணத்திற்குப் பின்னும் எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்.

என் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஏராளமான பண உதவி செய்தார். இன்று 5 பைசா, 10 பைசா வட்டிக்கு வாங்க வேண்டும் என்றாலும்கூட டாக்குமெண்ட், புரோ நோட், மார்ட்கேஜ் என்று எவ்வளவோ நிபந்தனைகள் உள்ளன. ஆனால், எனக்கு நினைவு தெரிந்து சில வருடங்கள் முன்புவரை பெயருக்கு ஒரு பைசா என்று ஒரு வட்டி வாங்கிக்கொண்டு, எந்தவிதமான கையெழுத்தும் இல்லாமல் எத்தனையோ பேருக்கு உதவியுள்ளார். எங்கள் குடும்பத்திற்கு செய்த அந்த உதவிகள் மட்டும் அன்று கிடைக்கவில்லை என்றால் இன்று நாங்கள் இருந்திருக்கவே மாட்டோம்.

அவரிடம் உதவி பெற்றவர்கள் பலர், உதவி பெறும் வரை ஒரு மாதிரியும், உதவி பெற்றதற்குப் பிறகு அவரை வேறு மாதிரியும் பேசியுள்ளார்கள். ஆனால், அவர் அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. எங்கள் குடும்பத்திற்கு ஏராளமான பண உதவி செய்துள்ளார். அத்தனையும் ஒரு பைசா பாக்கி இல்லாமல் திருப்பிக் கொடுத்துவிட்டோம். என் அப்பா மருத்துவமனையில் இருந்தபோது, அம்மா பல நேரங்களில் மருத்துவமனையில் இருக்கும்போது, என்னுடைய பெரியம்மா வீட்டிலும் அவர் வீட்டிலும் தான் அதிக நாட்கள் நானும் தங்கையும் இருந்துள்ளோம்.

பலருக்கும் அவர் எங்களிடம் காட்டும் பாசத்தைப் பார்த்து கொஞ்சம் சிறிய பொறாமை இருக்கும். அந்த அளவிற்கு எங்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுப்பார். அவர்கள் பிள்ளைகள் போல் நடத்துவார். நான் மூன்று வெளிநாடுகள், 20-க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்கள், தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்துள்ளேன். என் அப்பா படுத்த படுக்கையாக இருக்கும்போது, என்னுடைய வாழ்நாளின் முதல் சுற்றுலா, பள்ளிச் சுற்றுலா, பதினோராம் வகுப்பில் செல்ல வேண்டிய ஒரு சூழல். 500 ரூபாய் கடன் கொடுத்து “போய்வா” என்று என்னை அனுப்பி வைத்தார்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
— திருக்குறள் 103

என்ன பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் செய்யப்படும் உதவியின் நன்மை கடலைவிடப் பெரியது என்றார் வள்ளுவர்.

“அந்தம்மா உதவி செய்தபோது, ‘இதனால் எனக்கு என்ன கிடைக்கும்?’ என்று ஒருபோதும் கணக்குப் பார்த்ததில்லை. வள்ளுவர் சொன்ன ‘பயன்தூக்கார் செய்த உதவி…’ என்ற குறளுக்கு ஒரு மனித உருவம் இருந்தால், அது அந்தம்மாவாகத்தான் இருந்திருக்கும்.”

பெங்களூர், ஊட்டி, மைசூர் என்று நான் சென்ற அந்த முதல் சுற்றுலாதான் இன்னைக்கு உலகம் சுற்றும் ஆர்வத்தை என்னைத் தூண்டியது. என் முதல் சுற்றுலா அவரால்தான் சாத்தியமானது. அவர் அந்தப் பணத்தைக் கொடுத்து உதவாவிட்டால், சுற்றுலா என்ற ஒரு மகிழ்ச்சியான விஷயம் என் வாழ்வில் அதற்குப் பிறகு எத்தனை வருடம் கழித்து தொடங்கியிருக்கும் என்றே தெரியாது. இன்று உலகின் ஏழு கண்டங்களையும் சுற்றிப் பார்த்து ஒருமுறையாவது விண்வெளிக்கு சென்று வந்து விட வேண்டும் என்று என் வாழ்நாள் லட்சியமாக நான் வைத்து வாழ்ந்து கொண்டிருப்பதற்கு அவர் வாய்ப்பளித்த முதல் சுற்றுலாவே காரணம். அது வெறும் 500 ரூபாய் அல்ல. அது என்னுடைய வாழ்க்கையில் முதல் பயணத்திற்கான கதவைத் திறந்த 500 ரூபாய்.

எங்கள் குடும்பக் கோவில் சுடலை கோவில். அதன் பெயரால்தான் அந்தத் தெருவே அந்தப் பெயர் பெற்றது. அதை பல வருடங்கள் நிர்வகித்து வந்தவரும் அவர்தான். உதவி என்றால் பணம் மட்டுமல்ல பொருள் உதவி மனரீதியாக ஆறுதலாக இருப்பது, எல்லோரிடமும் ஆதரவாக பேசுவது. ஒருமுறை என்னை நாய் கடித்து விட்டது அப்பாவும் படுத்த படுக்கையாக இருந்த நேரம் ஊசி போட கூட பொருளாதார சூழ்நிலை இல்லாத நேரம் அண்டை வீட்டில் உள்ள நாய் தான் கடித்தது அந்த வீட்டு உரிமையாளரிடம் பேசி என் மருத்துவ செலவுக்காக போராடி பணம் பெற்றுக் கொடுத்தார். மிகவும் போல்டான ஒரு பெண்மணி எனக்காக பலரிடமும் சண்டை போட்டுள்ளார். சின்ன வயதில் நான் தவறி விழுந்து எழுந்ததற்காக ஒரு தண்ணீர் தொட்டியை மூடி அதற்கு பக்கத்தில் புதிய தொட்டியை கட்டினார். எப்படி எங்களுக்காக செய்த உதவிகளின் பட்டியல் எண்ணிலடங்காது. கடைசி வரை மகனோ, மகளோ யாரையும் சார்ந்திராமல் தனியாகவே வாழ்ந்து மறைந்துவிட்டார்.

இந்தத் தெருவில் வசித்த பலரும் ஏழை, பணக்காரர் என்று பேதம் இல்லாமல் பலரும் அவரிடம் பலவகையான உதவிகள் பெற்றுத்தான் வளர்ந்துள்ளார்கள். ஆனால், அதையெல்லாம் அவர்களில் சிலர் மறந்திருக்கலாம். ஆனாலும், அந்தத் தெருவும் அந்த வீடும் எப்போதும் அதை நினைவில் வைத்திருக்கும்.

என் அப்பா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அந்தமாவை சந்திக்க வேண்டும் என்று சொல்லி, அவரிடம் தான் என் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிச் சென்றார். உறவினர்கள் யாரிடம்கூட சொல்லவில்லை. அந்த அளவுக்குச் சிறுவயதில் இருந்து எங்களை அவர் கவனமாகப் பார்த்துக்கொண்ட அந்த எண்ணத்தினால்தான் அவர் அப்படிச் சொல்லிச் சென்றார்.

ஏன் என்றால், நான் பள்ளி படித்த பருவத்தில் அப்பா பெரும்பாலும் வெளியூரில்தான் வேலை பார்த்தார். வாரத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரம்தான் வீட்டிற்கு வருவார். நான், அம்மா, தங்கை மூன்று பேர் மட்டும் தான் வீட்டில் இருப்போம். எங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பது அந்தம்மா அவர்கள்தான். அவர் தனியாகத்தான் வசித்து வந்தார். ஆனாலும், எங்களுக்கு பெரிய பாதுகாப்பாக இருப்பார்.

ஒரு பெண் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும், ஒரு பெண் எப்படி பணத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், ஒரு பெண் எப்படி உதவி செய்ய வேண்டும், இப்படி ஒரு வீட்டை நிர்வாகம் செய்ய வேண்டும் எப்படி கோவிலை நிர்வாகம் செய்ய வேண்டும் எப்படி பணத்தை கையாள வேண்டும், எப்படி பாசமாக இருக்க வேண்டும் என்று பல விஷயங்களையும் அவரின் மூலமாக அறிந்துகொண்டேன், புரிந்துகொண்டேன்.

அவரை அந்த தெருவில் இருந்து நாங்கள் காலி செய்து வந்ததற்கு பிறகு 2015-க்குப் பிறகு அடிக்கடி சந்தித்துப் பேசவில்லை என்றாலும், அங்கே போகும் நேரத்தில் ஒரு முறையாவது பார்த்துவிடுவேன். அல்லது வெளியில் ஏதாவது நிகழ்ச்சியில் பார்த்துவிடுவோம். அவரிடம் பயன் பெற்ற எல்லோருக்கும் அவர் மேல் பல காலகட்டங்களில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் இருந்திருக்கலாம். யாருமே அவருடைய உதவும் உள்ளத்தை மறந்திருக்க மாட்டார்கள்.

வாலி ஒருமுறை சொன்னார். உலகில் எந்தப் பாவத்திற்கும் மன்னிப்பு உண்டு. நன்றி மறந்த பாவத்திற்கு மட்டும் மன்னிப்பே கிடையாது என்று. வள்ளுவர் இன்னும் அழுத்தமாகச் சொல்கிறார்:

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”

அந்தம்மா எங்கள் குடும்பத்திற்குச் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கும்போது, இந்தக் குறள் எனக்கு இன்னும் ஆழமாகப் புரிகிறது.

நானும் என் குடும்பமும் அவருக்குச் செலுத்த வேண்டிய நன்றி ஏராளம் இருக்கிறது. அம்மாவின் 15 வயதில் தொடங்கி என்னுடைய 26 வயது வரை எங்கள் குடும்பத்திற்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பல்வேறு விஷயங்களைச் செய்துள்ளார். அதையெல்லாம் நான் நினைத்துப் பார்க்காத தருணங்களே இல்லை.

சின்னச் சின்ன வருத்தங்கள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி அவர்களால் கிடைத்த நன்மைகளும், கிடைத்த முன்னேற்றங்களும் மிக அதிகம். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அவருடைய மருத்துவக் கடனை அவர்களுக்கு அடைத்ததற்குப் பிறகு, தங்கை மட்டும் என்னுடைய கல்விக்காக எவ்வளவோ எங்களுக்கு உதவி செய்துள்ளார். அப்பாவும் அம்மாவும் ஒரே நேரத்தில் மருத்துவமனையில் இருந்த காலகட்டம் உண்டு. அப்பொழுது எனக்கும் என் தங்கைக்கும் உணவு கொடுப்பதில் இருந்து எல்லா ஏற்பாடுகளையும் முன்நின்று செய்தவர் அவர்தான். அப்பா மரணத்திற்குப் பிறகு அம்மா மனநல சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், எங்களுக்கு தைரியம் கொடுத்து, ஊக்கம் கொடுத்து, உடனிருந்தவர்களில் முதன்மையானவர் அவர்தான்.

எப்போதும் நெருக்கமாக இருக்கக்கூடிய எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, அந்தக் காம்பவுண்டில் வசிக்கக்கூடிய பலருக்கும் அப்படி உதவி செய்தவராகவே இருந்திருக்கிறார். சுருக்கமாகச் சொல்லப்போனால், நாயகன் படத்தின் வேலு நாயக்கர் போன்ற ஒரு கதாபாத்திரம்தான் அவர். ஆதரவற்ற பலருக்கும் ஆதரவாக இருந்தார். ஒரு சிற்பி கல்லைச் செதுக்கி சிலையாக மாற்றுவதைப் போல, சில மனிதர்கள் நம்மை வாழ்வின் அனுபவங்களால் செதுக்குகிறார்கள். அந்தம்மா எனக்கு அப்படிப்பட்டவர். என்னைச் செதுக்கிய பெண்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால், அதில் முதலிடத்தில் அவர் நிச்சயம் இருப்பார்.

சிறு வயது முதல் ஒவ்வொரு ஒழுங்கையும் வாழ்வில் கற்றுக் கொடுத்தது அவர்தான். உணவு உண்பதில் தொடங்கி, உடை உடுத்துவது, குடும்பத்தின் மீது பொறுப்பாக இருப்பது, சிக்கனம், சேமிப்பு, பொறுமை, பக்தி, என் வாசிப்பு ஆர்வம் என் அப்பாச்சியிடம் இருந்து வந்தது. ஆனால், என்னுடைய சினிமா ஆர்வம் அந்தம்மாவிடமிருந்துதான் வந்தது. அத்தனை திரைப்படங்களையும் திருநெல்வேலியில் உள்ள எல்லா திரையரங்கங்களிலும், வீட்டில் தொலைக்காட்சியிலும் அவரோடு சென்று பார்த்துள்ளேன். அந்தம்மா வழியாகத்தான் திரைப்படம் என்னுள் ஆழமாக பதிந்தது. படங்களைப் பற்றியும் தொலைக்காட்சி தொடர்களை பற்றி அவரோடு நிறைய விவாதித்துள்ளேன்.

என் திரைப்படத்தில் நிச்சயம் அவருக்கு முதல் நன்றி கார்டு இருக்கும். எல்லோரையும் போலவும் ஒரு சாதாரண குடும்பத்தில் சாதாரண பெண்ணாகப் பிறந்து, பல்வேறு விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டாலும், தன் வாழ்வின் இறுதிவரை மன உறுதியோடு வாழ்ந்த ஒரு நபர். எஸ். ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார். ஒரே தெருவில் பிறந்து, அதே தெருவில் வளர்ந்து, அதே தெருவில் மரணிப்பதெல்லாம் ஒரு வரம்தான் என்று.

அந்தம்மா பிறந்தது மூலைக்கரைப்பட்டியாக இருந்தாலும், 20 வயதில் தொடங்கி கிட்டத்தட்ட 55 வருடங்கள் அவர் வாழ்ந்தது பாளை சுடலை கோவில் தெரு, 4 ஆம் நம்பர், 100 வருடம் பழமையான ஓட்டு வீட்டில்தான். தமிழ்நாட்டைத் தாண்டிப் பெரிதாக எங்கும் அந்தம்மா சென்றதில்லை. அந்த தெருவிலேயே பெரும்பாலான நாட்களை அந்தக் காம்பவுண்டிலேயே தான் அவர் கழித்துள்ளார்.

இந்தக் காம்பவுண்டில் வசித்த நபர்கள், அவர்களின் உறவினர்கள், அந்தத் தெருவில் வசித்த நபர்கள், அவர்களின் உறவினர்கள், அவர்களின் உறவினர்களின் உறவினர்கள் என்று எனக்குத் தெரிந்த நூற்றுக்கணக்கானோர் அவரால் பலவிதங்களில் பயன் பெற்றுள்ளார்கள். அவர்கள் வாழ்வின் தொடக்க காலங்களில் பல உதவிகளைப் பெற்றுள்ளார்கள். அவர்கள் பெரும் பணக்காரர்களாய், வாழ்வில் உயர்ந்த நிலையில் இருக்கலாம். ஆனால், அவர்களுடைய கஷ்ட காலங்களில் அந்தம்மா பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளார்.

அவர் உடலுக்கு வேண்டுமானாலும் மரணம் நிகழ்ந்திருக்கலாம். அவர் ஆன்மா நிச்சயம் அந்த இடத்திலேயேதான் இருக்கும். அவருடைய மரணத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த நாளைத்தான் செல்ல உள்ளேன். ஆனாலும், என் மனதில் அவருக்கு என்றுமே மரணம் கிடையாது.

என்னைப் பெற்ற அம்மா மட்டுமல்ல, என் வாழ்வில் அந்தம்மாவும் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்த அவர், கடந்த ஏழு நாட்களாகக் கொடுமையான உடல்நிலையைத் தாங்கிக்கொண்டிருந்தார் என்று அவர்கள் பிள்ளைகள் மூலமாக அறிந்துகொண்டேன்.

திருவள்ளுவர் ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்று சொன்னது ஏன் என்பதை அவரை நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் புரிந்துகொள்கிறேன். அவருக்கோ, அவர் குடும்பத்திற்கோ நானோ, என் குடும்பமோ எதையும் திருப்பிச் செய்ததில்லை. செய்யும் நிலையை எதிர்பார்க்கும் அளவுக்கு அவர் சூழல் இல்லை என்பது வேறு விஷயம். அவர்களோடு வாழ்ந்த காலத்தில் சிறிய சிறிய உதவிகள் அன்றாடம் செய்துள்ளேன். அவ்வளவுதான். அவர் செய்த உதவிகளுக்கு நான் திருப்பிக் கொடுக்கக்கூடியது ஒன்றே ஒன்று — அவரை மறக்காமல் இருப்பது.

கிட்டத்தட்ட 55, 60 வருட கால நட்பு என் அம்மாவிற்கும் அவருக்கும். ஆனால், இன்று அவருடைய மரணச் செய்தியைக்கூட என் அம்மாவிடம் சொல்ல முடியவில்லை. சொன்னாலும் புரிந்துகொள்ளும் நிலையில் அம்மா இல்லை. இதுதான் எனக்கு மிகப்பெரிய வருத்தமாக இருக்கிறது. அவருடைய இன்னொரு நெருங்கிய தோழி, அம்மாவுடைய அக்கா, அவரும் கடந்த வருடமே காலமாகிவிட்டார். இவர் மரணத்தை, அவர் இருப்பை, அவர் நினைவைப் பற்றி நான் பேசிப் பேசி தீராத அளவிற்கு, சொல்வதற்கு ஆயிரம் ஆயிரம் கதைகள் என்னுள்ளே தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

அதையெல்லாம் இன்று ஒரு நாளில் பேசி முடித்துவிட முடியாது. என் வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கப் போகிறேன். அந்தம்மா எனக்கும் என் குடும்பத்திற்கும் செய்த அத்தனை நன்மைகளுக்கும் நான் காட்டப்போகும் நன்றிக் கடன் அதுதான்…

“அறம் என்பது பெரிய பெரிய காரியங்களில் மட்டும் இருப்பதில்லை. ஒருவருக்குப் பசியிருக்கும்போது உணவு கொடுப்பதும், கஷ்டத்தில் பணம் கொடுப்பதும், பாதுகாப்பில்லாத ஒருவருக்குத் ஆத்ம துணையாக நிற்பதும் அறம்தான்.” அம்மா எங்களுக்கு அப்படி எல்லாமுமாக இருந்தார்.

“எங்களைப் பொறுத்தவரை அந்தம்மா அறத்தைப் பற்றி பேசவில்லை. அதை வாழ்ந்து காட்டினார்.”

பணம் இருந்தாலும், வசதி இருந்தாலும் எப்பொழுதும் சிக்கனமாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் உதவ வேண்டும். அன்பாக இருக்க வேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். அப்பா, அம்மா மீதான பாசம் அதிகம் இருக்க வேண்டும் என்று என் வாழ்வின் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டு, இன்று மண்ணை விட்டு மட்டும் மறைந்துள்ள அந்தம்மாவிற்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்…

அந்தம்மாவுக்கு நான் இனி எதையும் திருப்பிக் கொடுக்க முடியாது.

ஆனால், அவர் எனக்குக் கொடுத்த அன்பையும், நம்பிக்கையையும், உதவிகளையும் மறக்காமல் இருப்பதன் மூலம், அவரது வாழ்க்கையில் நான் பெற்ற இடத்திற்கு ஒரு சிறிய நன்றியாவது செலுத்த முடியும்.

அவர் மறைந்துவிடவில்லை…

என்னைப் போன்ற பலரின் வாழ்க்கையில், அவர் செய்த நன்மைகளாக இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

தமிழ் இலக்கியம் மரணத்தை முடிவாக மட்டும் பார்த்ததில்லை; ஒருவர் விட்டுச் செல்லும் புகழும் நினைவும் தான் அவருடைய வாழ்வின் தொடர்ச்சி என்றே நமக்குக் கற்பித்திருக்கிறது. அந்த வகையில் அந்தம்மா மறைந்தவர் அல்ல; நினைவுகளாகத் தொடர்ந்து, எனக்கு நினைவிருக்கும் வரை என் நினைவில் நிச்சயம் வாழ்வார்.

சிலர் இறந்த பிறகு நினைவாகிறார்கள்; சிலர் நினைவாக இருப்பதாலேயே இறப்பதில்லை.

அன்புடன்
ராம்

(அவர் அப்படித்தான் அழைப்பார். 26 வயது வரை என் அண்டை வீட்டார், நண்பர்கள் அனைவருக்கும் அதுதான் என் பெயர்.)

பாளையங்கோட்டையிலிருந்து

21.08.2026

இரவு 8.53 மணி