MVR Infotainer

சில நேரங்களில் சில அதிசயங்கள்

“சில நேரங்களில் சில அதிசயங்கள்:-”

“There are only two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle.”

— Albert Einstein

“Miracles happen every day. Change your perception of what miracle is, and you’ll see them all around you.”

— Jon Bon Jovi

“அவரவருக்கு நடக்கும் வரை, ஒவ்வொரு அதிசயமும் பிறருக்கு மூடநம்பிக்கையாகவே தெரியும்…” — மு.வெ.ரா

முதலில் அறிவியலாளர் ஐன்ஸ்டீன் சொல்லி இருக்கக்கூடிய விஷயம் பற்றி சொல்லணும்னா, கோட்டுக்கு அந்தப்பக்கம் நில்லு, இல்ல கோட்டுக்கு இந்தப் பக்கம் நில்லு; நடுவுல நிக்காத, லாரி அடிச்சிட்டு போயிடும்ங்கற மாதிரி சொல்லி இருக்காரு…

அமெரிக்க இசைக் கலைஞர் ஜோவி சொல்லிருக்கிற விஷயம், அதிசயம் நடந்து கொண்டே தான் இருக்கு. நீ உணர்ந்தா அது அதிசயம்; இல்லைன்னா அது சாதாரணம். அவ்வளவுதான்…

அதை ஒட்டியே, சில நேரங்களில் நாம் உணர்வதை அதிசயமாக நினைக்கிறோம். அதைச் சொன்னாலும், மற்றவர்களுக்கு அது நிகழாத வரை, அல்லது அப்படி ஒரு உணர்வு அவர்களுக்குக் கிடைக்காத வரை, அவர்கள் அதையும் மூடநம்பிக்கை என்று தான் நினைப்பார்கள். நினைத்துக் கொள்ளட்டும். நாம் நம் உணர்ந்த மகிழ்வை, மெய்சிலிர்த்த நிகழ்வுகளை பகிர்வதோ, பதிவு செய்வதோ கடமை என்று நினைக்கிறேன்..

“Extraordinary claims require extraordinary evidence.” — Carl Sagan

அமெரிக்க வானியல் ஆய்வாளர் கார்ல் சாகன், அசாதாரணமான கூற்றுகளுக்கு அசாதாரணமான ஆதாரங்கள் தேவை’ என்று ஒரு கருத்து கூறியுள்ளார். உண்மைதான் அதிசயங்கள் நிகழாது என்று ஒருபோதும் அறிவியல் கூறவில்லை; “ஆதாரமின்றி அவற்றை அதிசயம் என்று ஏற்க முடியாது” என்பதே அதன் நிலைப்பாடு. புதிய ஆதாரங்கள் கிடைத்தால், எந்தக் கூற்றையும் ஆராய அறிவியல் எப்போதும் தயாராக இருக்கும்.

என் வாழ்வில் ஏராளமான அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. அதை வைத்து ஒரு புத்தகமே போடலாம். எல்லாவற்றையும் சொல்வதற்கு இந்த ஒரு கட்டுரை போதாது. இரண்டு விஷயங்களைப் பத்தி சுருக்கமாக கூறிவிட்டு, நேற்று நடந்த ஒரு அனுபவத்தை கொஞ்சம் விளக்கமாக கூறுகிறேன்.

முதல் சம்பவம், 2011 காலகட்டம்.நண்பர் ஒருவரோடு சதுரகிரி மலைக்கு சென்றேன். முதல் முறையாக மேலே ஏறி விட்டு இறங்கும் பொழுது, எங்களுக்குள் எங்களுக்கு மட்டும் கேட்குமாறு மெதுவாகவே பேசினோம்.

“சதுரகிரியில் ஏராளமான சித்தர்கள் இருப்பதாக சொல்கிறார்களே…” என்று நான் சொல்ல, நண்பர், “ஒரு சித்தர் கூட நான் பாக்கலையே…” என்று சொன்னார்.

அப்படியே வேறு விஷயங்களைப் பேசிக்கொண்டே, இன்னும் கொஞ்ச தூரம் இறங்கி நடந்து வந்து விட்டோம்.

திடீரென்று எங்கள் எதிரில், நமது எழுத்தாளர் விக்ரமாதித்தன் போன்ற உருவத்தில் ஒருவர் வந்து, “என்ன, சித்தரை பாக்கணுமா? முதல் தடவையே பார்த்திட முடியுமா? வா… அடிக்கடி வா… பார்க்கலாம்…” என்று ராதிகா நடித்த அண்ணாமலை சீரியலில் பேசும் சூதாடி சித்தன் போன்று ஹை பிச்சில் பேசினார்.

நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு திரும்பும் போது, அவர் காணவில்லை. அந்த இடத்தில் ஒரு நாய் மட்டும் சென்று கொண்டிருந்தது. எங்களுக்கு மெய்சிலிர்த்து போனது.

இரண்டாவது சம்பவம் நடந்தது திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே. 2013 காலகட்டத்தில் ஒரு கோவிலில் ஒரு சித்தர் சமாதி இருப்பதாக சொன்னார்கள். அதை வீடியோ எடுக்க பார்க்கப் போக வேண்டும் என்று நாங்கள் செல்லும்போது, நாங்கள் செல்வதற்கு முன்பே கோவிலை மூடி விட்டார்கள். “வெளியில் இருந்து தான் கும்பிட முடியும்” என்றார்கள்.

அப்போது யோசித்துக் கொண்டிருக்கும்போது, யாரோ ஒருவர் திறந்து விட்டார். உள்ளே கர்ப்பக்கிரகம் திறக்கப்படவில்லை. ஆனாலும், வெளியில் இருந்து கும்பிட்டு விட்டு வெளியில் வந்ததற்கு பிறகு, ஒருவர் சொன்னார்:

“இந்த கோயிலிலும் ஒரு அதிசயம் இருக்கிறது. உங்களுக்கு வாய்ப்பு இருந்தால் கிடைக்கும்… சித்தர் காட்சி…” என்று சொன்னார்.

அப்போதும் நம்பிக்கை இல்லை. இருந்தாலும், சுத்தி முத்தி பார்த்துவிட்டு குளத்தை உற்றுப் பார்த்தால், கீழே ஒரு விளக்கு தலைகீழாக எரிந்து கொண்டிருக்கிறது. அதை சுற்றி ஒரு மீன் வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட சூரியன் மறைந்து இருட்டான நேரம். கோயிலிலும் எங்கும் விளக்குகள் இல்லை. அது ஒரு பிரதிபலிப்பாக இருக்க வாய்ப்பில்லை.

அப்போது, குளத்திற்குள் எரிந்தது என்ன? அதை மட்டும் ஒரு பெரிய மீன் சுற்றி வந்ததற்கான காரணம் என்ன? என்று இப்போது வரை புரியவில்லை. அந்த நொடியும் மெய்சிலிர்த்தது…

இதற்குப் பிறகு, தனிப்பட்ட வாழ்க்கையில் என் திருமணம், தங்கை திருமணம், இன்னும் பல நிகழ்வுகளில் நான் எதிர்பாராத பல அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், அதெல்லாம் மகிழ்ச்சியை கொடுத்ததைத் தவிர, மெய்சிலிர்க்கும் அளவுக்கு இல்லை. மேலே சொன்ன இரண்டு சம்பவங்களும், இப்பொழுது நினைத்தால் கூட புல்லரிக்கும்.

நேற்று, 26-06-2026, திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றேன். கிட்டத்தட்ட திருச்செந்தூர் சென்று மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது அதுவும் அலுவல் ரீதியாகத்தான் சென்றேன். அதற்கு முன்பு ஒரு 6 மாதங்களுக்கு முன்பு சென்றேன். அதற்கு முன்பு ஒரு 2 வருடத்திற்கு முன்பு சென்றேன். அதற்கு முன்பு வியன் முதல் பிறந்தநாளுக்கு 7 வருடங்களுக்கு முன்பு சென்றேன். அந்த கோவிலுக்கு வாரம் தோறும் செல்லும் என் நண்பர்கள் இருக்கிறார்கள் என்னையும் அடிக்கடி கூப்பிடுவார்கள். அடிக்கடி செல்லக்கூடியவன் கிடையாது.

என் குடும்பமே மூன்று தலைமுறையாக முருக பக்த குடும்பம் சஷ்டி வந்துவிட்டால் விடுமுறையே எடுக்காத என் அப்பா கூட அங்கேயே போய் இருப்பார். எங்கள் தாத்தா அதற்கு மேல் முருக பக்தி, முருகர் விழாக்களை பெரிதாக கொண்டாடுவாராம். அம்மாவும் அப்படியே தீவிரமான முருக பக்தர் வீடுகளில் பெரிய பெரிய படங்கள் உண்டு. நான் அவ்வளவு பெரிய பக்தி எல்லாம் கிடையாது.

அதுவும் சமீபமாக திருச்செந்தூர் கோயில் மேல் மக்கள் காட்டும் ஆர்வம், மிக அதிகமான கூட்டம் வருவது, அங்கே நடக்கும் சில முறைகேடுகள்… இப்போதைக்கு போகவே வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். இன்னொன்று, ஜோசியம், ஜாதகம் இதையெல்லாம் பெரிதாக நம்பும் ஆளும் அல்ல நான்.இருந்தாலும், கிட்டத்தட்ட நண்பர் ஒருவரின் தந்தையார், அம்மாவின் உடல்நலம் சார்ந்து, “விசாகம் அன்று திருச்செந்தூருக்கு சென்று ஒரு வேண்டுதலை வைத்து வாருங்கள்” என்று சொன்னார்கள்.

அவர் சொன்னதிலிருந்து இரண்டாவது நாள் விசாகம், வெள்ளிக்கிழமை வந்தது. சரி, வேறு ஒரு மாதத்தில் சென்றால் மறந்து விடுவோமோ என்று, போய் வந்து விடுவோம் என்று நினைத்தேன்.

அன்றைக்கு காலை பத்து மணிக்குத்தான் கலெக்டர் நிகழ்வுக்கான எல்லா வேலைகளும் செய்ய வேண்டும். 12 மணிக்கு பாடல் வெளியீட்டு விழா. அதற்கு தயாராக வேண்டும்.

முந்தைய நாள் இரவு ஒரு மணி வரை வீடியோ தயாரித்து, புரொஜெக்டரில் ப்ளே செய்து பார்த்து, ஆடியோ சிஸ்டம் எல்லாவற்றையும் சரி செய்து கொண்டிருந்தேன். பின் வீட்டிற்கு வந்து மற்ற வேலைகளை பார்த்துவிட்டு, தூங்குவதற்கு இரண்டு மணி ஆகிவிட்டது.

எப்பொழுதும் அலாரம் வைக்காமலே எழுந்திருப்பேன். அன்று ஒரு வேளை மிஸ் ஆகிவிடக்கூடாது என்பதனால், மனைவியை எழுப்பச் சொல்லிவிட்டு, சரியாக 3:30 மணிக்கு எழுந்து கிளம்பி, நாலு மணிக்கெல்லாம் பேருந்து நிலையத்துக்கு வந்து விட்டேன்.

ஐந்தரை மணி வரைக்கும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் திருச்செந்தூர் பஸ் நிற்கவே இல்லை. எல்லா பஸ்ஸிலும் கூட்டம்.

பிறகுதான் யோசித்துப் பார்த்தால், ஏற்கனவே வெள்ளிக்கிழமை அதிக கூட்டம் வரும். அதுவும் அரசு விடுமுறை, மொஹரம் பண்டிகை நாள். இன்னும் கூட்டம் வரும்.

என்ன செய்யலாம் என்று யோசித்து, கோவிலில் கண்காணிப்பாளராக பணியாற்றும் உறவினர் அண்ணனுக்கு போன் செய்தால், அவரும் இன்று விடுமுறையில் இருப்பதாகவும், “இப்போது கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கிறது. என்னுடைய சித்தப்பா வந்தபோதே என்னால் விரைந்து அழைத்துச் செல்ல முடியவில்லை. வரிசையில்தான் நீண்ட நேரம் காத்திருந்துதான் வந்தார்…” என்று சொன்னார்.

“குறைந்தது நான்கு மணி நேரம் ஆகும்” என்றார்கள்.

சரி, கோவிலுக்குள் போக வேண்டாம். வெளியில் நின்று கும்பிட்டு விட்டு வந்துவிடலாம் என்று நினைத்துத்தான் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன்.

500 ரூபாய் நோட்டை எடுத்து டிக்கெட் எடுக்க கொடுத்தேன். கண்டக்டர் அமைதியாக வாங்கி டிக்கெட்டை கிழித்து கொடுத்துவிட்டு, மீதி சில்லறையை கொடுக்கவில்லை. அவர் கொடுக்காத போது, “இப்ப கிடைக்காது; பஸ் இறங்கும்போது வாங்கிக்கோ” என்று சொல்லாமல் சொல்வது புரிந்தது.

எனக்கு அடுத்து ஒரு அழுக்கு வேட்டி, சட்டையில் ஒரு எளிய மனிதர் 500 ரூபாய் நோட்டை நீட்டினார். என்னை திட்டவில்லை; அவரை பலமாக திட்டினார்.

“எல்லாரும் 500 ரூபாய் நோட்டு கொண்டு வந்தா, நான் என்ன பண்றதுன்னு…” எனக்கும் சேர்த்து அவர் திட்டு வாங்கிக் கொண்டார். கடைசியில் இருவருக்கும் அந்த conductor சில்லறை கொடுக்கவில்லை. பேருந்து முழுவதும் கூட்டம். நின்று கொண்டே தான் சென்றேன்.

ஏற்கனவே, என்னுடைய நண்பரின் தந்தை சொல்லி இருந்தார்:“நீங்கள் திருச்செந்தூர் போவதற்கு பல சிரமம் ஏற்படும். ஆனால், அதையெல்லாம் கடந்து வருவதற்கு உங்களுக்கு கடவுளே வழி விடுவார்…” என்று. அதை நினைத்துக் கொண்டு கூட்டத்தில் நெருக்கி கொஞ்சமாக பிடிக்க கிடைத்த கம்பியை பிடித்துக் கொண்டே நின்று விட்டேன். பெரும்பாலும் தொலைதூரப் பேருந்துகளில் நின்று கொண்டு செல்வதற்கு நான் தயங்கியதில்லை. சீட்டில் உட்கார இடம் இல்லை என்பதற்காக பஸ்ஸில் ஏறாமல் இருந்ததில்லை. ஆனால் வழக்கத்தை விட சோர்வை தாங்க முடியாமல் நின்று கொண்டே தூங்கி வழிந்தேன்.

திடீரென்று கண்டக்டர் தட்டி எழுப்பி என் 500 ரூபாயை கொடுத்தார்.

“இதைக் வைத்துக் கொள்ளுங்கள். அதோ அவரிடம் டிக்கெட் காசு 42 ரூபாய் கொடுத்து விடுங்கள்…” என்று சொல்லிவிட்டார்.

அவர் சொன்னதிலிருந்து ஐந்து நிமிடத்தில் நாங்கள் இறங்க வேண்டிய திருச்செந்தூர் பேருந்து நிலையம் ந்துவிட்டது.

“கோவில் வாசல் வரை பேருந்து செல்லாது. இங்கேயே இறங்கிக் கொள்ளுங்கள்…” என்று கண்டக்டர் சொல்லிவிட்டார்கள்.

பின் அங்கிருந்து இறங்கி, கண்டக்டர் நான் பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்ன அந்த நபரை தேடினால், அவரின் 42 ரூபாயை எதிர்பார்க்காமல் சென்று கொண்டே இருந்தார்.

ஓடிப்போய் அவர் அருகில் நின்று ஐயா என்று அழைத்து “பணம் வாங்கிக்கோங்க…” என்று சொல்லவும், அவர் அமைதியாக ஒரு புன்னகை மட்டும் கொடுத்தார்.அருகில் உள்ள கடைக்கு சென்று ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி, அவருக்கு சில்லரை மாத்தி பணத்தை கொடுத்தேன். புன்னகையோடு வாங்கிக் கொண்டு வேறு பக்கம் திரும்பிகொண்டார்.

இருவரும் கோவில் வாசல் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தோம். நீண்ட நேரம் ஆனது. நேரம் போய்க் கொண்டே இருந்தது. பத்து மணிக்கு அலுவலகம் வர வேண்டும். மணி இப்பொழுது 7.30 மணியை நெருங்கி விட்டது.

இப்படியே திரும்பி விடலாமா? அல்லது கோவில் வாசல் வரைக்கும் சென்று கோபுரத்தை பார்த்து வணங்கி விட்டு வந்து விடலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, கோவிலில் கண்காணிப்பாளராக இருக்கும் அண்ணன் மீண்டும் என் தொடர்பில் வந்தார்.

என்னப்பா இறங்கிட்டியா அடுத்த முறை நான் பணியில் இருக்கும் போது வா என்று சொன்னார் அப்படியே “உங்க டிபார்ட்மெண்ட் மூலமாக பெர்மிஷன் வாங்கிச் செல்ல வேண்டியதுதானே?” என்றார்.

நான் பெரும்பாலான இடங்களில் என்னுடைய இன்புளுயன்ஸை பயன்படுத்தியதே கிடையாது. அதுவும் எனக்கு என்றால், சுத்தமாக பயன்படுத்துவதே கிடையாது. என் பல நண்பர்கள் வெங்கட் போன் செய்தாலே வேறு யாருக்காவது உதவி கேட்டு தான் போன் செய்வான் என்று சொல்வார்கள்.

“வேறு வழி இருந்தால் சொல்லுங்கள்…” என்று அண்ணனிடம் கேட்டேன்.

“வேண்டுமானால் முதியவர் கவுண்டர் பக்கத்தில் நின்னுக்கோ. அங்கே வரக்கூடிய முதியவர்கள் தனியாக வந்தால், அவர்களிடம் அனுமதி கேட்டு அவர்களோடு சென்றுவிடு. ஒருவரோடு ஒருவர் செல்லலாம் சீக்கிரமே சாமி பார்த்திடலாம்…” என்று சொன்னார்கள்.

அவரிடம் நான் விசாரித்ததை கேட்டுக் கொண்டிருந்த பக்கத்தில் இருந்த அந்த முதியவர் என்னை பார்த்து தம்பி “எனக்கு 74 வயசுதான் ஆகுது. என்னோட வாங்க. என் கூட ஒரு ஆள உள்ள கூட்டிட்டு போகலாம் கவலைப்படாம வாங்க உங்களை சீக்கிரம் கூட்டிட்டு போய்டுறேன்…” என்று சொன்னார்.

அங்கிருந்து கோவில் வாசலுக்கு செல்லும் மகளிர் கட்டணம் இல்லா பேருந்து வந்தது எல்லோருமே முந்திக்கொண்டு ஏறினார்கள் அதில் கூட்டத்தோடு கூட்டமாக ஏறி, மீண்டும் ஸ்டாண்டிங்கில் கோவில் வாசலில் இறங்கி நடந்து செல்ல தொடங்கினோம்.

என் உடன் வந்த வயதானவருக்கு செருப்பு கூட கிடையாது. ஆனால் என்னை விடவும் வேகவேகமாக நடந்தார். அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் நானும் நடந்து கொண்டே வந்தேன். நீங்கள் ஒன்றும் பின்னும் எதிரும் தூக்க கலக்கத்திலும் நன்றாக குளித்து கிளம்பி பட்டுப் புடவைகளும் மொட்டை அடித்து சந்தனம் தடவையும் நிறைய பேர் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

“சரி, முதியோர் கவுண்டர் எங்கே இருக்கிறது என்று விசாரித்து சென்று விடுவோமா?” என்று அவரிடம் கேட்டேன்.

அவர்,

“இல்லை. நான் மொட்டை போட்டு விட்டுத்தான் கோவிலுக்கு வருவேன்…” என்றார்.

“சரி, அப்போது இன்று நமக்கு தரிசனம் கிடையாது. நாம் இப்படியே கோபுரத்தை பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு திரும்பி சென்று விட வேண்டியதுதான்…” என்று நினைத்துக்கொண்டே அவரிடம் கிளம்புகிறேன் என்று சொல்லவும்,

அவர் “என்கூட வாங்க, தம்பி…” என்று என் கையைப் பிடித்து வேகமாக இழுத்துக் கொண்டு சென்றார்.போகிற வழி எல்லாம் க்யூவாக நின்று கொண்டே இருந்தது.

என்ன என்று விசாரித்தால், ஒன்று நாழிக்கிணறு செல்லும் க்யூ; ஒன்று மொட்டை போடுவதற்கு டோக்கன் எடுக்கக் க்யூ; இன்னொன்று, டோக்கன் வாங்கிய பிறகு மொட்டை போடுவதற்கான க்யூ.

இந்த க்யூவை பார்த்தாலே இன்னும் இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கும் போலையே. நிச்சயம் சாமி பார்க்க முடியாது. “கிளம்பி விடலாம்…” என்று அனைத்து மீண்டும் அவரிடம் சொல்ல வாயை திறக்கவும், அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

பேசவிடாமல் அவர் கையில் வைத்திருந்த பையை என்னிடம் கொடுத்துவிட்டு நேரடியாக டிக்கெட் கவுண்டரில் சென்று ஏதோ பேசினார். அங்கே உள்ளவர் திட்டினார். பின்னர் ஏதோ இவர் சொல்லி சமாளித்து, ஐந்து நிமிடத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.

அடுத்து மொட்டை போடும் க்யூ கொஞ்சம் முன்னேறி உள்ளது ஷாம்பு எல்லாம் தலையில் தேய்க்கிறார்கள். அந்த கியூவிற்கு சென்றால், அங்கேயும் ஒரு மணி நேரம் ஆகும் போல என்று நினைக்கும் அளவுக்கு கூட்டம் இருந்தது.

ஆனால், அங்கேயும் அந்த பெரியவர் ஒருவரிடம் அவர் உரிமையாய் சென்று, “தம்பி, நான் மொட்டை போட்டுக் கொள்ளவா?” என்று கேட்க,

அவரும் என்ன நினைத்தாரோ,

“சரி தாத்தா…” என்று சொல்ல, அந்த வேலையும் ஐந்து நிமிடத்தில் முடிந்து வெளியே வந்து விட்டோம்.

நேராக கடலுக்கு போய் அவர் குளித்தார். நான் தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டேன்.

அப்பொழுதுதான் என் நண்பரின் அப்பா எனக்கு சொன்ன இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது.

“முதலில் மூவர் சன்னதிக்கு சென்று அவர்களை வணங்கிய பின்னர்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும்…” என்று. நான் இதுவரை மூவர் சன்னதிக்கு சென்றது கிடையாது. அது எங்கிருக்கிறது என்றும் தெரியாது.

உடன் இருந்த பெரியவரிடம் கேட்டால்,

“இத்தனை வருடமாக இந்த கோவிலுக்கு வருகிறேன். எனக்கும் அப்படி ஒரு இடம் இருப்பதே தெரியாது…” என்றார்.

சரி என்று சொல்லிவிட்டு அங்கே இருந்த தூய்மை பணியாளர் ஒருவரிடம் கேட்கும் போது அவர் சரியாக வழி காட்டினார் நாங்கள் நின்ற இடத்தில் இருந்து ஒரு அரை கிலோமீட்டர் தொலைவில் அந்த இடத்தை சுட்டி காட்டினார்.வேகமாக நடக்கத் தொடங்கினோம் போகும் வழியில் தேடி பார்த்ததில், கிடைத்த தகவல்

“திருச்செந்தூர் முருகன் கோவில் பிரமாண்டமாக உருவாவதற்கு முக்கிய பங்களிப்பை செய்தவர்கள் மூன்று சுவாமிகள் என வரலாறு குறிப்பிடுகிறது. அவர்கள் ஸ்ரீ காசி சுவாமிகள், ஸ்ரீ மௌன சுவாமிகள் மற்றும் ஸ்ரீ ஆறுமுக சுவாமிகள் ஆகியோர் ஆவார்கள்.”

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுற்றியுள்ள மண்டபங்களையும், கோபுரங்களையும் இந்த மூன்று சுவாமிகளும் சேர்ந்துதான் கட்டினார்கள் என்றும், இதனால்தான் இவர்கள் மூவரின் ஜீவசமாதியும் திருச்செந்தூர் கோவில் அருகிலே அமைந்துள்ளது என பலரும் குறிப்பிடுகிறார்கள்.

முருகன் கோவிலின் நாழிக்கிணற்றுக்கு தெற்கு புறத்தில் இந்த மூவர் சமாதி அமைந்துள்ளது. மூன்று சுவாமிகளின் திருவுருவங்களும் முருகன் கோவிலின் உள்பிரகாரத்தில் குரு பகவான் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள மூன்று தூண்களில் சிலை வடிவில் அமைந்துள்ளது என்று அறிந்து கொண்டேன்.

அந்த இடத்திற்கு சென்று பார்த்தால் அங்கே எல்லாம் மூடி வைத்திருந்தார்கள். பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தது. என்ன இப்படி ஆகிவிட்டது என்று இடதுபுறம் திரும்பி பார்த்தால் அவர்களின் வண்ண ஓவியம் சுவற்றில் வரையப்பட்டிருந்தது. அதை நினைத்துக் கொண்டு உள்ளே இருக்கும் ஜீவ சமாதியில் அவர்களை மனதளவில் வேண்டிக்கொண்டு அங்கு இருந்து கிளம்பி வெளியே வந்தோம்.

ஸ்ரீ மௌன சுவாமி, ஸ்ரீ காசி சுவாமி, ஸ்ரீ ஆறுமுக சுவாமி

மீண்டும் விறுவிறுவென நடை போட்டு வேகமாக என் கையை பிடித்துக் கொண்டே நடந்து சென்றார் அந்த பெரியவர்.

போகிற வழியில் ஒவ்வொரு விற்பனையாக நடந்து கொண்டிருக்க அதை பார்க்க பார்க்க அந்த பெரியவரை பார்த்து

“டீ குடிக்கிறீர்களா?” என்று கேட்டேன்.

“வேண்டாம்…” என்று சொல்லிவிட்டார்.

தண்ணீர் கேட்டதற்கும், “வேண்டாம். உள்ளே சென்று வணங்கிய பின்னர்தான் குடிப்பேன்…” என்று சொன்னார். வேண்டுதல் பலமோ என்று கேட்டேன் அதற்கும் அப்படியெல்லாம் இல்லை அடிக்கடி மொட்டை போடுவேன் என்றார்.

பின் நேராக முதியோர் கவுண்டர் நுழையும் இடத்திற்கு என்னை அழைத்து சென்று விட்டார். செக்யூரிட்டியிடம் அவர் ஆதார் கார்டை காட்டி வயதை உறுதி செய்தவுடன், அவரை உள்ளே செல்ல அனுமதித்தார்கள். என்னையும் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றார்.

உள்ளே சென்றதுதான் தாமதம். இரண்டு நிமிடத்தில் அவர் எங்கே சென்றார் என்று தெரியவில்லை.

நீண்ட நேரமாக அந்த கூட்டத்தில் அவரைத் தேடிக் கொண்டிருந்தேன் அப்பொழுது தான் கவனித்தேன், அவர் கூட்டத்துக்குள் நுழைந்து நுழைந்து என்னிடமிருந்து ஒரு 30 அடி தூரம் முன்னே சென்றிருந்தார்.

நானும் நுழைந்து நுழைந்து அவர் அருகில் சென்று விட்டேன்,

“தாத்தா, சாமி கும்பிட்டு போய் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம். சரியா…” என்று கேட்டேன்.

“அதான் உள்ள வந்துட்டே இல்லப்பா. இனிமேல் உனக்கு என்ன? நீ போய் நல்லா சாமி கும்பிடுப்பா…” என்று சொல்லிவிட்டு, மீண்டும் என் கையை விலக்கிவிட்டு நகர்ந்தார்.

ஏதோ அவர் பெயர் கேட்க வேண்டும் போல் எனக்கு தோன்றியது.

“ஆமா தாத்தா, ரொம்ப நேரமா உங்க கூடவே சுத்திட்டு இருக்கேன். உங்க பேர் என்ன?” என்று கேட்டேன்.

அவருக்கு காது கேட்கவில்லையா என்று தெரியவில்லை. அங்கு ஏதோ ஒரு சத்தம். அதற்குள் கூட்டம் வேகமாக நகர்ந்தது.

மீண்டும் அவர் வேகமாக உள்ளே சென்றுவிட்டார்.

அவரை தேடிப் பார்த்தேன். ஆனால் அவரை எங்கும் காணவில்லை.

நேரம் ஆகிவிட்டதால் கூட்டத்தில் எப்படியாவது முன்னே செல்ல வேண்டும் என்று முன்னேறிக் கொண்டே இருந்தேன்.

மொத்தமாக முதியவர்கள் கவுண்டரில் நுழைந்த 45 வது நிமிடத்தில் சன்னதி அருகே சென்று விட்டோம். வழக்கம்போல் இருக்கக் கூட விடாமல் விரட்டிக் கொண்டிருந்தார்கள் மனதார வேண்டிக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாய் நகர்ந்து வந்தேன், வெளியில் வந்து குரு சன்னதியையும் பெருமாள் சன்னதியையும் தள்ளி நின்றே வணங்கி விட்டு, காற்றில் மிதந்து வந்த சாம்பிராணி புகையை சுவாசித்துக் கொண்டு, பிரசாதத்திற்கு நிற்கும் க்யூவை பார்த்தேன்.

பொங்கல் வாசம் மூக்கை துளைத்தாலும், நேரம் ஆகிவிடுமே என்பதால் அங்கிருந்து நகர்ந்து வெளியில் வந்தேன். பசிக்கிறது. ஏதாவது சாப்பிடலாம் என்று பிரசாத ஸ்டாலை தேடினால், அது தள்ளி இருப்பதாக சொன்னார்கள்.

அது எங்கே என்று, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் விசாரிக்க, அவர் “ரொம்ப தூரம் நடக்க வேண்டும். இந்தாங்க, புடிங்க…” என்று தன் கையில் வைத்திருந்த இரண்டு நாவல் பழங்களை எனக்கு கொடுத்து சாப்பிடச் சொன்னார்.

பசி எடுத்திருந்தாலும், நேரம் ஆகிவிடும் என்பதால் அந்தப் பழத்தை வாயில் போட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக நடக்க தொடங்கினேன்.

என் பின்னாலே இன்னொரு நபரும் வேகமாக வந்தார். என்னை தாண்டி முன்னே சென்றார்.

திரும்பி பார்த்து,

“நல்லா தரிசனம் கிடைத்ததா, தம்பி?” என்று கேட்டார். பார்த்தால் என்னை உள்ளே அழைத்து சென்ற அந்த முதியவர்.

“ஆமாங்கய்யா. சாமி பாக்காமலே வீட்டுக்கு போக வேண்டியது இருக்குமோனு நினைச்சேன். உங்களால்தான் நல்ல சாமி பாத்துட்டேன் சீக்கிரமாவும் பாத்துட்டேன்…” என்றேன்.

அவர் என்னுடைய காம்ப்ளிமெண்ட்டை ஒன்றும் பார்க்கவில்லை. ஓட்டை பல் தெரிய சிரித்து விட்டு மீண்டும் விறுவிறுவென்று நடக்க தொடங்கினார்.

அப்போதுதான் எனக்கு தோன்றியது இவ்வளவு தூரம் உதவினார். பெயர் கூட கேட்கவில்லையே என்று.

ஓட்டமும் நடையுமாக அவர் வேகத்துக்கு ஈடு கொடுத்து அவரை நெருங்கி அவரை பார்த்து கேட்டேன்…

“ஐயா, உங்க பெயர் என்னன்னு சொல்லவே இல்லையே…” என்றேன்.

அவர் திரும்பி பார்க்காமலே,

“முருகன்…”

என்று சொல்லிவிட்டு, வேகமாக நடந்து கூட்டத்தில் மறைந்து விட்டார்…

அந்த வார்த்தை கேட்ட பிறகு ஒரு சில நொடிகள் அப்படியே அங்கேயே நின்றுவிட்டேன்.

அந்த நொடி, சரியாக கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தவர்களில் ஒருவர்,

“திருச்செந்தூர் முருகனுக்கு…” என்று குரல் எழுப்ப, அவர்களை சுற்றி இருந்த அனைவரும்,

“அரோகரா… அரோகரா…” என்று சொல்ல, என்னை அறியாமல் என் வாயிலும் “அரோகரா…” என்று வார்த்தை வந்தது புல்லரித்துப் போனது.

என் அப்பா பெயரும் முருகன்தான்.

வந்தது யாரோ…

வரவே கூடாது என்று நினைத்திருந்த என்னை திருச்செந்தூருக்கு வர வைத்தது, சாட்சாத் திருச்செந்தூர் முருகனே தானோ…

தெரியவில்லை.

ஆனால், இந்த அதிசயம் மனதிற்கு மகிழ்ச்சியையும், நாம் முன்னெடுத்து சென்று கொண்டிருக்கும் பல நேர்மறை முயற்சிகளில் நிச்சயம் நல்லதே நடக்கும், வெற்றியே கிடைக்கும் என்ற உத்வேகத்தையும் எனக்கு அதிகம் கொடுத்துள்ளது மட்டும் உண்மை.

(மொத்தத்தில், சீக்கிரமே கிளம்பியும் சூழ்நிலை காரணமாக தாமதமாக திருச்செந்தூர் போய் சேர்ந்திருந்தாலும், பேருந்தில் இருந்து இறங்கிய ஒரு மணி நேரத்தில் பார்த்துவிட்டு, நான் திட்டமிட்ட நேரத்திற்குள் ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டேன்.)

கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

கோவில்கள் தேவையா? என்பது போன்ற பல விவாதங்கள் பல இடங்களில் நடந்து கொண்டிருந்தாலும், நம் முன்னோர்கள் இதுபோன்ற கோயில்களையும், அங்கே சென்று வர வேண்டும் என்கிற வழிபாட்டு முறைகளையும் உருவாக்கியதற்கு பல நல்ல காரணங்கள் உள்ளன.

அதில் ஒரு காரணம், நம்மை நாமே அமைதிப்படுத்திக் கொள்ள, நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள, நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள, கோவில்கள் நிச்சயம் ஒரு நல்ல இடமாக இருக்கும்.

அன்புடன்,
மு.வெ.ரா
பாளையங்கோட்டையிலிருந்து
26-06-2026
காலை 10 மணிக்கு எழுதியது.